ரூ. 67 லட்சம் மோசடி வழக்கில் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் கைது

கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 53) நிதி நிறுவனத் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பொற்செல்வி (வயது 49) இவர்களுக்கு கோவை ராம் நகர் பகுதியில் சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 8 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் வசிக்கும் அனைவரும் வீட்டை ஒப்பந்த அடிப்படையில் லீசுக்கு எடுத்து வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் தொழில் அபிவிருத்திக்காக ராம்தாஸ் தனது அடுக்குமாடி குடியிருப்பின் பத்திரத்தை வங்கியில் வைத்து கடன் வாங்கியதாக தெரிகிறது .வங்கி கடனுக்கு முறையாக தவணை கட்டாததால் வங்கி அதிகாரிகள் குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினர். இது குறித்து குடியிருப்போர் வீட்டின் உரிமையாளர் ராம்தாசிடம் கேட்டதுடன், அடுக்குமாடி குடியிருப்பவர்கள்தாங்கள் கொடுத்த அட்வான்சை திருப்பித் தருமாறு கேட்டனர். ஆனால் அவர் அதை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். குடியிருப்பில் லீசுக்கு உள்ள 6 பேரிடம் அட்வான்ஸ் தொகை ரூ. 76 லட்சத்தை ராமதாஸ் வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாக கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின பேரில் போலீசார் ராமதாஸ் மீது மோசடி வழக்கு பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தனர். இவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி பொற்செல்வி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.