கோவையில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.4. 10 கோடி பறிமுதல் .வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.

கோவை: கர்நாடக மாநிலம்பெங்களூருவில் ஓட்டல் நடத்தி வருபவர்பெரோஸ் கான். அத்துடன் சீனாவில் இருந்து வரும் செல்போன்களை இந்தியாவில் விற்பனை செய்யும் டீலராகவும் இவர் உள்ளார். கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த இவருக்கு கோவை குனியமுத்தூர் பகுதியிலும் ஒரு வீடு உள்ளது. இந்த நிலையில் பெரோஸ் கான் முறையாக வருமான வரி செலுத்தாமல் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் பெங்களூருவில் உள்ள அவரது ஓட்டல் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள பெரோஸ்கான் வீட்டிலும் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ4 கோடியே 10 லட்சம் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். மேலும் பெரோஸ்கானின் வீட்டின் முன்புறம் துப்பாக்கி ஒன்று வைக்கப்பட்டிருப்பதை பார்த்த வருமான வரித்துறை அதிகாரிகள் இதுகுறித்து கோவை மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கோவை மாநகர போலீசார் நேரில் வந்து பெரோஸ் கானில் வீட்டில் ஆய்வு மேற்கொண்ட போது அது ” ஏர்கன் ” வகை துப்பாக்கி என்பது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது..