குஜராத் அருகே நடுக்கடலில் பாகிஸ்தானிலிருந்து மீன்பிடி படகில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே இது குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடற்படையினருக்கு தகவல் கொடுத்தனர். இரு தரப்பினரும் சேர்ந்து போதைப்பொருள் வரும் படகை மடக்க திட்டம் தீட்டினர். போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்த கடல் பகுதியில் ஐ.என்.எஸ் தாபர் போர்க்கப்பல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. கப்பலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் இருந்தனர். நடுக்கடலில் சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தானில் இருந்து இரண்டு படகுகள் வருவதை கடற்படையினர் கண்டுபிடித்தனர்.
அதையடுத்து, இரண்டு படகுகளையும் கடற்படையினர் மடக்க முயன்றனர். அதில் ஒரு படகு சர்வதேச எல்லைக்குள் நுழைந்து தப்பிச் சென்றுவிட்டது. மற்றொரு படகை கடற்படையினரும், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் சேர்ந்து மடக்கி பிடித்தனர். படகில் சோதனை செய்து பார்த்தபோது அதில் 36 சாக்குகளில் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் 525 கிலோ உயர் தர கஞ்சாவும், 234 கிலோ உயர் ரக மெத்தம்பேட்டமைன் போதைப்பொருளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் பார்ட்டிகளில் அதிக அளவில் பயன்படுத்தக்கூடியது ஆகும். இவற்றை இந்தியாவிற்கு கடல் வழியாக கடத்திக்கொண்டுவந்து, இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு அனுப்ப போதைப்பொருள் கடத்தல் கும்பல் திட்டமிட்டு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.2,000 கோடியாகும். போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சஞ்சய் சிங் தலைமையில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் படகிலிருந்தவர்கள் குஜராத்தின் போர்ப்பந்தர் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.
இந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது பாகிஸ்தான் கடத்தல்காரர்களுக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. சமீபகாலமாக போதைப்பொருள்களை பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி கொண்டு வர குஜராத் கடற்பகுதியை கடத்தல்காரர்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதனால் குஜராத் கடற்பகுதியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.