ஒரே ஆண்டில் ரூ.2 லட்சம் கோடி முதலீடுகள்: 3 லட்சம் வேலை வாய்ப்புகள்- தொழில் துறையில் புரட்சி செய்த தமிழ்நாடு..!!

சென்னை: தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் கொரோனா பரவலையும் சமாளித்து ரூ.2 லட்சம் கோடி அளவுக்குத் தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளது.

இதன்மூலம் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலனடைய உள்ளனர்.

2021 ஆம் ஆண்டு. கொரோனா வைரஸின் இரண்டாம் அலையில் இந்தியா தத்தளித்துக் கொண்டிருந்த தருணம் அது. தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. நாள்தோறும் அதிகரித்த கொரோனா தொற்று; சிகிச்சைப் பலனின்றி இறக்கும் மனிதர்கள் என மக்கள் அச்சத்தில் உறைந்திருந்தனர். கொரோனா பாதிப்பால் அதிக இடர்ப்பாடுகளை தமிழ்நாடும் சந்தித்தது.

இப்படியொரு நெருக்கடியான நிலையில்தான், தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. மக்களின் பேராதரவுடன் தி.மு.க வெற்றிபெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. ஒருபுறம் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்த நிலையில், அதனைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அரசு திட்டமிட்டு செயல்பட்டது. இதற்கான பலனும் கிடைத்தது.

மறுபுறம், தமிழ்நாட்டுக்கான புதிய முதலீடுகளைக் கொண்டு வருவதில் அரசு ஆர்வம் காட்டியது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளால் இந்தியாவில் அதிக முதலீடுகள் குவியும் மாநிலத்தில் ஒன்றாக தமிழ்நாடும் உருவெடுத்துள்ளது. அதாவது, கடந்த 14 மாதங்களில் மட்டும் தமிழகத்துக்கு ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக, கடந்த ஜூலை மாதம் 4 ஆம் தேதி நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.1,25,244 கோடி மதிப்பிலான 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.

தற்போது வரையில், 192 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. இதன்மூலம் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் சாத்தியக்கூறுகள் உள்ளன. தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நிறுவனங்களுக்கான நிலங்களை அடையாளம் கண்டறியும் பணி தொடங்கியுள்ளது. மேலும், பல நிறுவனங்கள் திட்டமிடல் பணியில் ஆர்வம் செலுத்தி வருகின்றன.

தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘தி.மு.க ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் கிடைத்துள்ளன. ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் தமிழகத்தில் 2,05,802 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தில் ரூ.68,375 கோடிக்கு 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடப்பட்டுள்ளது’ என்றார். இந்த முதலீடுகள்தான் தற்போது அதிகரித்துள்ளன.

முதலீடுகள் பெருகுவது குறித்து, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், ‘விண்வெளி, பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு முதலீடுகளைப் பெற்றுள்ளது. தமிழகத்தை முதலீட்டாளர்கள் விரும்பும் இடமாக அரசு மாற்றியுள்ளது.

அதற்கேற்ப, தொழில்துறை அமைச்சகத்தின் பெயர் ‘தொழில்துறை ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகம்’ என்று பெயர் மாற்றம் செய்தது. தமிழக அரசின் செயல்பாட்டால் இன்னும் பல நிறுவனங்கள் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஆர்வமாக உள்ளன’ என்றார்.

‘தொழில்துறையில் தமிழ்நாடு புரட்சி செய்துள்ளது’ என்பதை மத்திய அரசின் தரவரிசைப் பட்டியல் எளிமையாக விளக்குகிறது. அதாவது, மத்திய அரசின் சார்பில் இந்தியாவில் எளிதாக தொழில் செய்யக்கூடிய மாநிலங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், தொழில் தொடங்குவதற்கு ஏற்ற இடம், எளிதாக வணிகம் செய்யும் வசதி உள்பட பல்வேறு அம்சங்களைக் கணக்கில் கொண்டு இந்த தரவரிசைப் பட்டியலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இந்த தரவரிசைப் பட்டியலில் 14 ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாடு 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

‘வணிகச் சீர்திருத்த செயல்திட்டம் -2020’ஐ அமல்படுத்தியதன் அடிப்படையில் சாதனை செய்ததாக ஆந்திரா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா என 7 மாநிலங்களை வரிசைப்படுத்தியதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. இதற்காக, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை, முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

ஏற்றுமதி துறையிலும் தனித்துவமாக தமிழ்நாடு முன்னேறி வருகிறது. தமிழகத்தில் இருந்து ரூ.1.93 லட்சம் கோடி அளவுக்கு பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஏற்றுமதி துறையில் இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

தேசிய ஏற்றுமதிக்கான தமிழ்நாட்டின் பங்கு என்பது 2020-21 ஆம் ஆண்டு நிலவரப்படி 8.97 சதவீதமாக இருந்தது. குறிப்பாக ஆடை, அணிகலன்கள் மற்றும் காலணிசார் தொழிலில் 58 சதவீதம், 45 சதவீதம் என்ற அளவில் தமிழ்நாட்டின் பங்கு உள்ளது.

சிறு, குறு தொழிற்சாலைகளின் ஏற்றுமதித் திட்டங்களைக் கண்காணிக்க பிரத்யேக அமைப்பாக ‘திட்டக் கண்காணிப்புப் பிரிவு’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

சிறந்த உலகளாவிய முதலீட்டுத் தளம்’ என்ற அளவில் நல்லதொரு மாற்றத்தைத் தமிழகம் ஏற்படுத்தியுள்ளது. எஃப்.டி.ஐ எனும் அந்நிய நேரடி முதலீட்டை 41.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், 2023-ம் ஆண்டு இறுதிக்குள் ‘உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு’ (GIM) நிகழ்வை நடத்துவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் அந்நிய நேரடி முதலீடு 41.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. ‘2023-ம் ஆண்டு இறுதிக்குள் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் சந்திப்பு மூலம் அதிக முதலீடுகளை ஈர்த்து வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்’ என முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வடக்கு வளர்கிறது; தெற்கு தேய்கிறது’ எனக் காலம்காலமாக சொல்லப்படுவதுண்டு. மாறாக, இந்தியாவின் தென்கோடியில் உள்ள தமிழ்நாடு தொழில்துறையில் பிரதானப் பங்கு வகிக்கிறது. ஏனென்றால் இந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு அதிக முதலீடுகளைப் பெறுவதில் படுவேகமாக உள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தை தொடர்ந்து உற்பத்திகளின் அடிப்படையில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. இருப்பினும், நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்களுடன் ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தித் துறை என்பது தமிழ்நாட்டில்தான் உள்ளது என்பதே இதன் சிறப்பம்சம். ஜவுளி, ஆடைகள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் தோல் பொருட்கள் துறைகள் ஆகியவை தமிழக உற்பத்தி துறையில் தனி ஆவர்த்தனம் செலுத்துகின்றன.

‘உற்பத்தி துறையில் தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தின் பங்கு என்பது பிற மாநிலங்களைவிடவும் தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது’ என்பது பெருமைப்படக் கூடிய ஒன்று.

தொழில்துறையின் வருடாந்திர கணக்கெடுப்பின் அடிப்படையில் 2018-19 ஆம் ஆண்டு நிலவரப்படி, மாநிலத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தி துறையின் மொத்த மதிப்பில் ஊதியம் மற்றும் சம்பளமாக மட்டும் 19 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. இது குஜராத்தில் 11.2 சதவீதமாகவும் மகாராஷ்டிராவில் 13.6 சதவீதமாகவும் மட்டுமே உள்ளது.

தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே அரசின் நோக்கமாக உள்ளது. இதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ‘2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமுள்ள மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும்’ என்ற இலக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார்.

இந்த இலக்கை எட்டிப் பிடிக்கும் வகையில், ‘மாநிலத்தில் தயாரிக்கப்படும் அனைத்துப் பொருள்களும் உலகின் அனைத்து நாடுகளுக்கும் சென்று சேர வேண்டும்’ என்ற முனைப்பில் அதற்கான பணிகளை அமைச்சர்களும் அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது, 1,500 கோடி ரூபாய் மதிப்பில் 7,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 12 புதிய திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மேலும், 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 12 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏறக்குறைய 18 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, ‘மாநில உயிரி தொழில்நுட்ப ஊக்குவிப்புக் கொள்கை-2022’ மற்றும் ‘மாநில ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை-2022’ ஆகியவற்றையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ரூ.3,500 கோடியை ‘லுலு குழுமம்’ முதலீடு செய்ய உள்ளது. பன்னாட்டு நிறுவனமான ‘லுலு குரூப் இன்டர்நேஷனல்’, தமிழ்நாட்டில் இரண்டு வணிக வளாகங்களையும் ஏற்றுமதிசார் உணவு பதப்படுத்தும் பிரிவையும் அமைக்க உள்ளது. இதன் மொத்த முதலீடு ரூ.3,500 கோடியாகும்.

லுலு குழுமம் சார்பில் ரூ.2,500 கோடியில் மால்கள் கட்டப்பட உள்ள நிலையில், உணவு பதப்படுத்தும் பிரிவானது ரூ.1,000 கோடியில் கட்டப்பட உள்ளது. இதன்மூலம் ஐந்தாயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளன. லுலு குழுமம் சார்பில் மிக விரைவில் மால்களைக் கட்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்துதல், ரியல் எஸ்டேட், விருந்தோம்பல் (Hospitality) மற்றும் உணவு பூங்காக்கள் ஆகிய துறைகளில் முதலீடு செய்வதற்காக ஐக்கிய அரபு அமீரக தொழிலதிபர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

‘துபாயில் இருந்து வரும் முதலீட்டாளர்கள் மூலம் தென் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் பிரமாண்ட மரச்சாமான்களைத் தயாரிக்கும் யூனிட்டுகளை அமைப்பதற்கு பரிசீலனை செய்ய வேண்டும்’ என்றொரு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர, மாவட்டவாரியாக முதலீடுகளுக்கு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இது மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் முதலீடுகள் சமமாக இருப்பதை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், மக்களின் வாழ்வாதாரத்தையும் ஒருசேர மேம்படுத்தும் முயற்சியாகவும் அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.