கோவை ரத்தினபுரியை சேர்ந்த ராஜ்குமார். இவர் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவர் அந்த பகுதியில் புதிதாக வீடுகள் கட்டினார். இந்த வீடுகளுக்கு 6 புதிய மின் இணைப்பு கேட்டு முறைப்படி விண்ணப்பித்து கட்டணம் செலுத்தி இருந்தார். இது தொடர்பாக ரத்தினபுரி மின்வாரிய அலுவலகத்தில் போர் மேனாக வேலை பார்க்கும் ஹாரூணை சந்தித்து தனது வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்க வேண்டும் என்று ராஜ்குமார் கூறினார். அதற்கு மின் இணைப்பு வழங்க ரூ. 18 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று ஹாருண் வற்புறுத்தினார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜ்குமார் இது குறித்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார் . கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு திவ்யா மேற்பார்வையில் நேற்று மாலை மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர் . அப்போது ராஜ்குமார் ரத்தினபுரி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று போர்மேன் ஹாரூணை சந்தித்து ரூ. 18 ஆயிரத்தை கொடுத்தார். அவர் லஞ்ச பணத்தை ஹேங்க்மேன் உதயகுமாரிடம் கொடுக்குமாறு தெரிவித்தார். அதன்படி உதயகுமாரிடம் ராஜ்குமார் லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஹாரூணையும் , உதயகுமாரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0