இந்தியாவின் மிகப்பெரிய ஆஞ்சநேயர் கோயிலைப் புனரமைக்க ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு- தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு..!

தெலுங்கானா மாநிலம், ஜக்தியால் மாவட்டத்தில் இருக்கும் கொண்டகட்டு மலைப்பகுதியில் சுமார் 800 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து அமைந்திருக்கிறது ஆஞ்சநேயர் ஸ்வாமி கோயில்.

இந்தியாவின் மிகப்பெரிய ஆஞ்சநேயர் கோயிலில் ஒன்றாகக் கருதப்படும் இதில் தற்போது புனரமைப்புப் பணிகள் தொடங்கவிருக்கின்றன. இதற்காக நேற்று முன்தினம் புதன் கிழமை அன்று ரூபாய் 1000 கோடி ஒதுக்கப்படுவதாக தெலுங்கானா முதல்வர் கே.சந்திர சேகர ராவ் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பானது, நேற்று முன் தினம் தெலுங்கானா பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி தலைவரும், காங்கிரஸ் எம் பியுமான ரேவந்த் ரெட்டி, ராமர் கோயில் கட்டுவது குறித்து வெளியிட்டிருந்த அறிவிப்புக்கு தெலுங்கானா முதல்வர் அளிக்கும் பதிலடியாகக் கருதப்படுகிறது.

ரேவந்த் ரெட்டி, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால்,, வெற்றிக்குப் பின் தெலுங்கானாவில் 100 தொகுதிகளில் ராமர் கோயில் நிர்மாணிக்கப்படும்’ – எனக் கூறி இருந்தார்.

அந்த அறிவிப்பின் எதிரொலியாக சந்திர சேகர் ராவின் உத்தரவு நேற்று வெளியாகி இருக்கிறது.

கொண்டகட்டில் இருந்து 8 கிமீ தொலைவில் இருக்கும் நச்சுபள்ளியை ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்த சந்திர சேகர் ராவ், ஆஞ்சநேயர் ஸ்வாமி கோயிலில் சிறப்பு வழிபாட்டை முடித்துக் கொண்டு அங்கிருந்து செல்லும் வழியில் கொனேரு புதிய புஷ்கரணி, பெத்தல ஸ்வாமி கோயில், சீதம்ம கண்ணீட்டி தாராம் கொண்டல ராயுடு குட்ட முதலிய திருத்தலங்களை வழிபட்டார்.

பின்னர், தெலுங்கானா டூரிஸம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரான இந்திரகரன் ரெட்டி மற்றும் அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுடன் அவர் நடத்திய சந்திப்பில் கொண்டகட்டு கோயிலைப் புனரமைக்கும் பணிக்கான வேலைத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப் பட்டது.

கோயிலை மேலும் விஸ்தரித்து பக்தர்களை ஈர்க்கும் வகையில் அவர்களது தேவைகளை நிறைவேற்றும் பிரத்யேக கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் முதலியவற்றை அங்கு நிர்மாணிப்பதற்குத் தேவையான நிதி, கோயிலை விஸ்தரிக்க நிலம் தேவைப்பட்டால் அவற்றை தேர்வு செய்வதற்கும், பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

முக்கியமாக கொண்டகட்டு ஆஞ்சநேய ஸ்வாமி கோயிலில் ஹனுமன் பக்தர்களுக்கு என்றே ஸ்பெஷலாக சுமார் 50,000 பக்தர்கள் ஒரே நேரத்தில் ஒன்று கூடி ஹனுமன் சாலிஸா பாடி தங்களது தீக்ஷயைப் பெறும் வண்ணம் மிகப்பெரிய அரங்கம் ஒன்றை நிர்மாணிக்கத் திட்டவரையறைகளைத் தருமாறு தெலுங்கானா முதல்வர் கேட்டுக் கொண்டார்.