தமிழக பத்திரப்பதிவு துறையின் வருவாயை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகளை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
தமிழகத்தில் 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் மூலம் ஆண்டுக்கு 25 லட்சம் பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு ரூ.13 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கிறது. கடந்த நிதியாண்டில் ரூ.12 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைத்தது. இதனால், நடப்பாண்டில் ரூ.15 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இவற்றில் ஜனவரி மாதம் இறுதி வரையிலான காலத்தில் 10 ஆயிரத்து 785 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது. இதையடுத்து, மீதமுள்ள ரூ.4,215 கோடியை அடுத்த மாதத்திற்குள் வசூலிக்கும் நடவடிக்கைகளில் பதிவுத்துறை ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே, ஜிஎஸ்டி உள்ளிட்ட காரணங்களால் பிற வழிகளில் வரி உயர்வுக்கு வாய்ப்பு இல்லை. இதனால், பத்திரப்பதிவு துறை வருவாயை மேலும் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பதிவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போதைய நிலவரப்படி சொத்து விற்பனை பதிவில், 7% முத்திரை தீர்வை, 4% பதிவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது இந்தியாவிலேயே மிக அதிகபட்ச கட்டணம் என்பதால் இதை உயர்த்த வாய்ப்பில்லை. அதே நேரத்தில் நிறுவனங்கள், வங்கிகளிடம் கடன் பெறுவதற்காக தாக்கல் செய்யும் ஆவண ஒப்படைப்பு பத்திரங்களை பதிவு செய்ய சொத்து மதிப்புக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கலாம். மேலும், அதிக மதிப்புள்ள சொத்துக்களின் செட்டில்மென்ட் பத்திரங்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் வரை கட்டணம் விதிக்கலாம். இதனிடையில் சொத்து மதிப்பில் குறைந்தபட்சமாக 1 (அல்லது) 2 சதவீதம் கட்டணம் நிர்ணயித்தாலும், பெரிய அளவில் அரசுக்கு வருவாய் கிடைக்கும். இதற்கான சாத்தியக் கூறுகளை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.