சென்னை: எந்த மதமும், சாதியும் அற்றவர் என்று சான்றிதழ் வழங்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூரை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு ‘எந்தமதமும், சாதியும் அற்றவர்’ எனசான்றிதழ் வழங்குமாறு திருப்பத்தூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஏற்கெனவே சிலருக்கு இதுபோல சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதால், சாதி, மதம் அற்றவர் என தனக்கும் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அதில் கோரியிருந்தார்.
நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இந்த வழக்குவிசாரணை நடந்தது. அப்போதுதமிழக அரசு தரப்பில், ‘எந்தமதமும், சாதியும் அற்றவர் எனசான்றிதழ் வழங்க வட்டாட்சியர்களுக்கு அதிகாரம் இல்லை. வட்டாட்சியரால் என்னென்ன சான்றிதழ் வழங்க முடியும் என பட்டியலில் உள்ளதோ, அந்தசான்றிதழ்களை மட்டுமே வழங்க அவருக்கு அதிகாரம் உள்ளது’ என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, நீதிபதி கூறியதாவது: ‘எந்த மதமும், சாதியும்அற்றவர்’ என தனக்கு சான்றிதழ்வழங்க வேண்டும் என்ற மனுதாரரின் விருப்பம் பாராட்டுக்குரியது. அதேநேரம், இதுபோலசான்றிதழ் வழங்கினால், அதனால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். சொத்து உரிமை, வாரிசு உரிமை, கல்வி, வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு போன்றவற்றில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.
கேள்வி கேட்க முடியாது: தவிர, ஏற்கெனவே உள்ள அரசாணைகளின்படி, கல்வி நிலையங்களில் உள்ள விண்ணப்பங்களில் ‘எந்த மதமும், சாதியும் சாராதவர்’ என்று தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. விண்ணப்பங்களில், சாதி, மதம் தொடர்பான விவரங்களை பூர்த்தி செய்யாமல் அப்படியே விட்டுவிடலாம். அதை அதிகாரிகள் கேள்வி கேட்க முடியாது. எந்த மதமும், சாதியும் அற்றவர் என்று சான்றிதழ் வழங்கவருவாய் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை. அப்படி இருக்க, அந்த சான்றிதழை வழங்குமாறு வட்டாட்சியர்களுக்கு உத்தரவிட முடியாது. வட்டாட்சியரும் தன் விருப்பம்போல சான்றிதழ் வழங்க முடியாது. இவ்வாறு கூறிய நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.