அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி அணியினர் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றார்கள்.
ஓ.பன்னேர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க தற்போதைய சூழலில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை உறுதி செய்யும் வகையில் தான் அதிமுகவின் தலைமை கழகம் சார்பில் ஓர் அறிக்கை வெளியாகி இருந்தது. எப்போதும் அதிமுக அலுவலகத்தில் கூட்டம் நடத்தவேண்டும், ஆலோசனை செய்யவேண்டும் என்றால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவரின் பெயரில் தான் அறிக்கை வரும். ஆனால் நேற்று கழக தலைமை நிலைய செயலாளர் – தலைமை கழகம் என அறிக்கை வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில் இன்று ( 27.06.22) திங்கள்கிழமை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமை கழக நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க 27.06.2022 – திங்கள்கிழமை காலை 10மணிக்கு தலைமையகம் – புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகை கூட்ட அரங்கில், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் என்னை யாரும் கட்சியில் இருந்து நீக்க முடியாது என மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். இதற்க்கு செக் வைக்கும் வகையில் கட்சி விதியை மீறி ஓபிஎஸ் செயல்படுவதாக கூறி தலைக்கழக நிர்வாகிகளை ஆலோசனை செய்து அவரை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிகின்றது. இதனால் தமிழகத்தில் அதிமுக தொண்டர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.