காங்கிரஸுக்கு திரும்பினால் தங்கள் கீழ் பணியாற்ற தயாராக இருக்கிறோம் –  ஜி.கே. வாசனுக்கு கே.எஸ். அழகிரி அழைப்பு..!

துரை: ஜி.கே. வாசன் காங்கிரஸ் கட்சிக்குதிரும்பினால் அவருக்குக் கீழ்பணியாற்றத் தயாராக இருக்கிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.

அழகிரி அழைப்பு விடுத்துள்ளார். மதுரையில் தமாகா, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரி பேசியதாவது: காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஜி.கே. மூப்பனார் போன்ற பல தலைவர்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பிய வரலாறு உண்டு. தமாகா தற்போது கொள்கை அடிப்படையில் இல்லாமல் தனி நபருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் செயல்படுகிறது.

தமாகா தலைவர் ஜி.கே. வாசனை மீண்டும் காங்கிரசுக்கு அழைக்கிறோம். அவருக்கு கீழ்பணியாற்றவும் என்னைப் போன்றவர்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, மதுரை வந்த கே.எஸ். அழகிரி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராகுல் காந்தி ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று தவறாக பேசினார் என பாஜக குற்றம் சாட்டுகிறது. ஒவ்வொருவருக்கும் பேசுவதற்கு உரிமை உண்டு. அதானியை பற்றி பேசுவது தவறா ? அவர் குறித்து பேசினால் தேச துரோகமா?

நாட்டில் தனி மனிதர் வியாபாரம் செய்வதை நாம் எதிர்ப்பதில்லை. அதற்கான உரிமை உண்டு. சட்டமும் அனுமதிக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் முதலாளிகளுக்கு உதவி செய்கின்றன. ஏன் செய்கிறார்கள் என கேள்வி கேட்கக் கூடாதா? அதானியை குற்றம் சாட்டினால் இந்தியாவை குற்றம் சாட்டுவதாக சித்தரிப்பது தவறு.

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகிறார். அதிமுக-பாஜக கூட்டணி உடைந்த கண்ணாடி. இவ்வாறு அவர் கூறினார்.