தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் குறிப்பிட்ட கடைகளை தேர்வு செய்து அங்கு சூப்பர் மார்க்கெட்டில் விற்பது போன்று மளிகை பொருட்களை பாக்கெட்டில் விற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 35,323 ரேஷன் கடைகள் உள்ளது. இதில் 10,279 ரேஷன் கடைகள் பகுதி நேர கடைகளாக செயல்பட்டு வருகின்றது. முதல்வர் மு க ஸ்டாலின் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை தரமானதாக மாற்றுவதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் உணவு பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் ரேஷன் கடைகளுக்கு திடீரென்று சென்று ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டு கூடுதல் வசதிகளை செய்து தருவது தொடர்பாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் ரேஷன் கடைகளை நவீனப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது வாடகை கட்டிடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு நிரந்தர கட்டிடம் கட்டிக் கொடுப்பது, ரேஷன் கடைகளில் அதுவும் குறிப்பாக கிராமப்புறங்களில் மலைப்பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் வைஃபை வசதியை கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது நியாய விலை கடைகளில் தற்போது அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகின்றது. சில கடைகளில் டீ தூள், உப்பு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
எனவே கடையின் இடவசதியை பொறுத்து மேலும் சில பொருட்களை விற்பனை செய்வதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்படுவது போன்று குறிப்பிட்ட ரேஷன் கடைகளை தேர்வு செய்து அங்கு மளிகை பொருட்களை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ய முயற்சி செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 முதல் 25 ரேஷன் கடைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், பொது மக்களிடம் கிடைக்கும் வரவேற்பு பொறுத்து இந்த திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.