தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரியமான மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் தங்களது எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோதமாக மீன் பிடிப்பதாக குற்றம்சாட்டி தொடர்ந்து மீனவர்களைக் கைது செய்து வருகின்றனர். தமிழக மீனவர்களை தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைந்து அத்துமீறி கைது செய்வதையும் இலங்கை கடற்படை வாடிக்கையாக வைத்துள்ளதாக மீனவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக படகுகள் மற்றும் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முடிவு செய்துள்ளனர்.
மீனவர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.