யாழ்ப்பாணம்: இலங்கையில் ராஜபக்சேக்களின் சாம்ராஜ்ஜியம் வீழ்ந்ததை ஈழத் தமிழர்கள் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகளை வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
இலங்கை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜபக்சே சகோதரர்களின் பிடியில்தான் இருக்கிறது. இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்சே பதவி வகித்த காலத்தில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தனித் தமிழீழ நாட்டுக்கான ஆயுதப் போராட்டம், சர்வதேச சதிகளுடன் நிர்மூலமாக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் இயக்கமே அழித்தொழிக்கப்பட்டது.
2009-ம் ஆண்டு அதிபராக மகிந்த ராஜபக்சே, ராணுவ செயலாளராக கோத்தபாய ராஜபக்சே தலைமையில் நடத்தப்பட்ட தமிழர்களுக்கு எதிரான யுத்தம் 21-ம் நூற்றாண்டின் மிக மோசமான இனப்படுகொலையாகும். இந்த இறுதி யுத்தத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் ஈவிரக்கம் இல்லாமல் படுகொலை செய்யப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கதி என்ன என்பது இன்று வரை தெரியவில்லை.
இலங்கையில் ஆட்சிகள் மாறின.. அதிபர் பதவியில் இருந்த மகிந்த ராஜபக்சே பிரதமரானார்; ராணுவ செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்சே, அதிபரானார். இப்படி மாறி மாறி ராஜபக்சே சகோதரர்களின் பிடியில் சிக்கித் தவித்த இலங்கை மிகப் பெரிய பொருளாதார பேரழிவை எதிர்கொண்டது. இதனால் ராஜபக்சேக்களைக் கொண்டாடிய சிங்களரும் அவர்களுக்கு எதிராக போராட்டங்களைத் தொடங்கினர்.
சாதாரணமாக அரசுக்கு எதிரான போராட்டம் என்றுதான் ராஜபக்சேக்கள் நினைத்தனர்; ஆனால் தங்களது சாம்ராஜ்ஜியங்களை சொந்த சிங்களரே தூக்கி வீசி எறிவர் நினைத்துப் பார்க்கவில்லை; முதலில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விரட்டியடிக்கப்பட்டார். உயிருக்கு அஞ்சிய மகிந்த ராஜபக்சே தப்பி ஓடி தலைமறைவானார். இதனால் ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் புதிய அனைத்து கட்சி இடைக்கால அரசு அமைந்தது.
ஆனாலும் பொருளாதார பேரழிவுநிலை இலங்கையை மிக மோசமான நிலைமைக்கே தொடர்ந்து கொண்டு சென்றது. இதனால் ஓயாத மக்கள் போராட்டம் இப்போது அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபாய ராஜபக்சேவை தூக்கி எறியப்பட்டார். கொழும்பில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையை ஒட்டுமொத்த போராட்டக்காரர்களாகிய மக்கள் கைப்பற்றினர். இதனால் உயிருக்கு அஞ்சி பதுங்கி கிடக்கிறார் கோத்தபாய ராஜபக்சே.
அதேபோல் பிரதமராக வந்த ரணில் விக்கிரமசிங்கேவும் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்துவிட்டார். அவரது பழங்கால வீடும் போராட்டக்காரர்களிடம் இருந்து தப்பவில்லை. ரணில் பராமரித்து வாழ்ந்து வந்த பழங்கால வீடு தீக்கிரையாக்கப்பட்டது. இப்போது ஒட்டுமொத்த இலங்கையே அரசியல் தலைமை ஏதும் இல்லாமல் தலை இல்லாத சடலமாக தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இலங்கையின் இந்த பேரவலம் குறிப்பாக ஜனாதிபதி மாளிகையில் இருந்து கோத்தபாய ராஜபக்சே தப்பி ஓடியதை தமிழீழத் தமிழர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடித் தீர்த்தனர். வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணீரூற்று நகர்பகுதியிலும் புதுக்குடியிருப்பு நகர் பகுதியிலும் தமிழர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். கிழக்கில் கல்முனையிலும் தமிழர்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர். ஈழத் தமிழர் தாயகப் பகுதி, கொடூர ராஜபக்சேக்களின் கொட்டம் அடங்கியதில் பெருமகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.