தட்சிண கன்னடா,-பி.எப்.ஐ., தலைவர்கள் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி, இத்தனை நாள் தலைமறைவாக இருந்த ஐந்து பேரை கைது செய்தனர்.இந்தியாவில் பி.எப்.ஐ., எனப்படும் ‘பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா’ அமைப்பினர் பிரிவினையை துாண்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த மாதம் கர்நாடகாவின் பெங்களூரு உட்பட பல்வேறு இடங்களில் பி.எப்.ஐ., மற்றும் எஸ்.டி.பி.ஐ., அமைப்பின் அலுவலகங்களில் என்.ஐ.ஏ.,எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர், போலீசார் இணைந்து சோதனை நடத்தினர். இதில் 115 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சோதனை நடந்த போது பி.எப்.ஐ., அமைப்பை சேர்ந்த சில தலைவர்கள், தொண்டர்கள் தலைமறைவாக இருந்தனர். இவர்களில் சிலர், சொந்த ஊர் திரும்பி இருந்தனர்.
இது குறித்து கிடைத்த உறுதியான தகவலின் பேரின் நேற்று தட்சிண கன்னடாவின் பனம்பூர், மங்களூரு, உல்லாள் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ளூர் போலீசார் சோதனை நடத்தினர். அதில், ஐந்து பி.எப்.ஐ., தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.இது போல எஸ்.டி.பி.ஐ., அமைப்பினரின் வீடுகளிலும் சோதனை நடத்தினர். அப்போது, அவர்களுக்கும் பி.எப்.ஐ., அமைப்புக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரித்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களில், பி.எப்.ஐ., அமைப்பின் மூன்று முக்கிய பிரமுகர்களிடம் என்.ஐ.ஏ., அமைப்பினர் விசாரணை நடத்துகின்றனர்.பி.எப்.ஐ., அமைப்பை சேர்ந்த இன்னும் சிலர் சுற்றுலா பெயரில் வெளி மாநிலம், நாடுகளுக்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் திரும்பி வந்ததும், விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.