2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக ராகுல் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி.!!

கமதாபாத்: ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கை சூரத் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் எப்படி அனைத்து திருடர்களுக்கும் மோடி என்ற குடும்ப பெயர் வந்தது? என்று பேசினார். இது தொடர்பாக பாஜ எம்எல்ஏ புர்னேஷ் மோடி தொடர்ந்த வழக்கில், சூரத் நீதிமன்றம் கடந்த மாதம் 23ம் தேதி ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவரது எம்பி பதவி உடனடியாக பறிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஆர்பி மொகேரா, அடுத்த விசாரணையை ஏப்ரல் 20ம் தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கை சூரத் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் ராகுல் காந்திக்கான தண்டனை நீடிக்கிறது. அடுத்ததாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் அவரால் நிவாரணம் பெற முடியவில்லை என்றால், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும். அதற்குப் பிறகு அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது. ஒட்டுமொத்தமாக 8 ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட தடை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.