காலையும், மாலையும் வாக்கிங் போவது போல் உள்ளது ராகுல்காந்தி நடைபயணம்- கடுமையாக விமர்சித்த சீமான்..!

காலையிலும், மாலையிலும் நடைபயிற்சி மேற்கொள்வதுபோல் உள்ளது ராகுல்காந்தியின் நடைபயணம் என்று விமர்சித்த சீமான், முதன்மை சாலைகளில் நடைபயணம் சென்றால் எப்படி மக்கள் பிரச்னை தெரியும், கிராமப்புற சாலைகளில் சென்றால் மட்டுமே மக்கள் எவ்வளவு வறுமையில் உள்ளனர் என்பது தெரியவரும் என்று கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தாடையம்பட்டியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி இல்ல காதணி விழாவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு விழாக் குடும்பத்தினரை வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசுகையில், உசிலம்பட்டி பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்பது. இதை நாம் தமிழர் கட்சியும் பல்வேறு வகையில் கோரிக்கையாக வைத்துவிட்டது. இதற்கு மேலும் எப்படி அரசுக்கு எடுத்துரைப்பது என தெரியவில்லை என்று கூறினார்.

தொடர்ந்து இந்த கோரிக்கையை ஏற்காமல் இருந்தாலும் மீண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் நீரை திறந்து கோரிக்கையை நிறைவேற்றி கொடுக்க வேண்டும். அதனால் பல ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் பயன்பெறும் என்பது எங்களின் கோரிக்கை வேண்டுகோள் என பேசினார்.

மேலும் ராகுல்காந்தி நடைபயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய சீமான், ராகுல்காந்தி நடைபயணத்தின்போது மறுபடியும் இந்திய ஒற்றுமையைப் பற்றி தான் பேசி கொண்டிருக்கிறார். இதனால் தேசிய இனங்களின் உரிமை பறிக்கப்படுகிறது என்பது தெரிகிறது. காங்கிரஸ் வந்தாலும், பாஜக வந்தாலும் தேசிய இனங்களின் உரிமை தொடர்ந்து பறிக்கப்பட்டுதான் வருகிறது. ஒரே நாடு, ஒரே வரி என்பதால் ஒரு மாநிலத்தின் தேசிய இனங்களின் உரிமை அறவே பறிபோகிறது என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், இப்போது காங்கிரஸ் கட்சி எந்த திட்டத்தை எதிர்த்து பிஜேபி-க்கு எதிராக போராடுவார்கள். நீட் தேர்வை எதிர்த்தா? இல்லை ஜிஎஸ்டி-யை எதிர்த்தா? எந்த திட்டமாக இருந்தாலும் வேர் அவர்களுடையது தானே, அதனால் அவர்கள் எதையும் பேச தகுதியற்று போய்விட்டார்கள் என்று விமர்சித்தார்.

மேலும் அரை நூற்றாண்டு காலங்களாக காங்கிரஸ் தான் ஆண்டுள்ளார்கள். தலைமுறை தலைமுறையாக ஆண்டுள்ளபோது முதன்மை சாலையில் ஏன் நடைபயணம் செய்ய வேண்டும், என்னை போல கிராமத்திற்கு வந்தால்தானே என் மக்கள் எவ்வளவு வறுமையோடு இருக்கிறார்கள் என்பது தெரியும். முதன்மை சாலையிலேயே ஒன்றேகால் மணி நேரம் நடப்பது காலையிலும், மாலையிலும் நடைபயிற்சி செய்வது போன்று உள்ளது என்று விமர்சித்தார்.

முடிந்தால் இந்த ஆளும் அரசு செய்யும் அநீதியை மக்கள் மன்றத்தின் மூலம் மக்களை கூப்பிட்டு வைத்து பேசுங்கள். அப்படி பேச உங்களுக்கு தகுதி இல்லை, ஏனெனில் இந்த திட்டங்களையெல்லாம் நீங்கள் தான் கொண்டு வந்தீர்கள் என எதிர் தரப்பினர் ஒரே வரியில் சொல்லி முடித்து விடுவார்கள் என்று விமர்சித்து பேசினார்.