காங்கிரஸிலிருந்து நான் வெளியேற ராகுல் காந்தியே காரணம்- குலாம் நபி ஆசாத் குமுறல்..!

காங்கிரஸ் கட்சியிலிருந்து நான் வெளியேறியதற்கு ராகுல் காந்திதான் காரணம் என்று மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு எதிராக ஜி23 தலைவர்கள் போர்க்கொடி தூக்கியதில் குலாம் நபி ஆசாத் முக்கியமானவர். இதன் காரணமாகவே மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் முடிந்ததவும் அவருக்கு பதவி ஏதும் வழங்காமல் காங்கிரஸ் தலைமை ஓரம் கட்டியது. சமீபத்தில் ஜம்மு காஷ்மீருக்கான தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராக குலாம் நபி ஆசாத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்தார்.

ஆனால், அவர் நியமித்த சிலமணிநேரத்தில் குலாம் நபி ஆசாத் அந்தப் பதவியிலிருந்து விலகினார். இதனால் காங்கிரஸ் தலைமைக்கும் குலாம் நபி ஆசாத்துககும் இடையே மோதல் முற்றியது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து குலாம் நபி ஆசாத் விலகியுள்ளார்

குலாம் நபி ஆசாத் தனது விலகலுக்கான காரணம் குறித்து சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதற்கு ராகுல் காந்திதான் காரணம். அவரின் முதிர்ச்சியின்மையும், ஆலோசனையின்றி செயல்படுவதும் கட்சியிலிருந்து விலகக் காரணம். மூத்த தலைவர்கள் தொடர்ந்து கட்சியிலிருந்து ஓரம் கட்டப்படுகிறார்கள்.அனுபவம் இல்லாதவர்களின் எண்ணிக்கை கட்சியில் அதிகரித்து வருவதாலும் கட்சியிலிருந்து விலகுகிறேன்

2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு ராகுல் காந்திதான் காரணம். அதன்பின் இரு தேர்தல்களிலும் காங்கிரஸால் வெல்ல முடியவில்லை.

காங்கிரஸ் கட்சியில் பெயரளவுக்குதான் சோனியா காந்தி தலைவராக இருக்கிறார். மற்றவகையில் ராகுல் காந்திதான் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்குகிறார். அனைத்து முக்கியமான முடிவுகளையும் ராகுல் காந்திதான் எடுக்கிறார்.

காங்கிரஸ் கட்சி தனது அரசியல் இடத்தை பாஜகவுக்கும், பிராந்தியக் கட்சிகளுக்கும் விட்டுக்கொடுத்துவிட்டது. கடந்த 8 ஆண்டுகளாக தீவிரம் இல்லாத ஒருவரை பதவியில் காங்கிரஸ் கட்சி அமர்த்தியுள்ளது.

துரதிரஷ்டமாக ராகுல் காந்தி அரசியலுக்குள் வந்தபின், 2013ம் ஆண்டு உங்களால் காங்கிரஸ் துணைத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். அதன்பின் காங்கிரஸ் கட்சியில் அதற்கு முன் இருந்த ஆலோசனை அமைப்பும் ஒட்டுமொத்தமாக சிதைக்கப்பட்டது.

அனைத்து மூத்த தலைவர்களும், அனுபவம் வாய்ந்த தலைவர்களும் கட்சியில் ஓரங்கட்டப்பட்டனர். புதியவர்களும், அனுபவம் இல்லாதவர்கலும் கட்சி விவரங்கள் பேசி நடத்தப்பட்டன.

2014ம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் கட்சி இரு மக்களவைத் தேர்தல்களிலும் தோல்வி அடைந்து வெட்கப்பட்டுள்ளது. 2014 முதல் 2022 வரை நடந்த 49 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 39 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றுள்ளது. 4 மாநிலத் தேர்தல்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றுள்ளது. 6 முறை கூட்டணி ஆட்சி கிடைத்தது. துரதிர்ஷ்டமாக இன்று 2 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆள்கிறது. அந்த இரு மாநிலங்களிலும் கூட்டணியில்தான் ஆட்சி நடக்கிறது

2019ம் ஆண்டு மக்களவைத்தேர்தலுக்குப்பின் காங்கிரஸ் கட்சி நிலைமை மோசமடைந்தது. ராகுல் காந்தி தலைவர் பதவியிலிருந்து இறங்கிபின், செயற்குழுக் கூட்டத்துக்கும் கட்சிக்கும் உயிர்கொடுக்கும் மூத்த தலைவர்களின் பேச்சை இழிவுபடுத்தாமல் இடைக்காலத் தலைவராக நீங்கள் பொறுப்பேற்றீர்கள்.

கடந்த 3 ஆண்டுகளாக நீங்கள் அதே பதவியில் இன்றுவரை தொடர்கிறீர்கள். ஆனால், ரிமோட் கன்ட்ரோல் முறை நிர்வாகம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியை நேர்மையை நம்பகத்தன்மையை எவ்வாறு சிதைத்ததோ அதேபோன்று காங்கிரஸ் கட்சிக்கும் வந்துவிட்டது. நீங்கள் பெயரளவுக்குத்தான் நியமிக்கப்பட்டுள்ளீர்கள். அனைத்து முடிவுகளையும் ராகுல் காந்திதான் எடுக்கிறார் இவ்வாறு குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.