நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, கோவை தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.
தி.மு.க-வில் வழக்கம் போல உட்கட்சி பூசல் பூகம்பமாக வெடித்திருக்கிறது. அ.தி.மு.க-விலும் ஏராளமான திருப்பங்களும், உள்ளடி வேலைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
கோவை அதிமுக கோவை மேயர் ரேஸ்… `புறப்பட்ட புதிய புயல்’ – அப்செட்டில் எஸ்.பி வேலுமணி நிழல்?!
தேர்தல் பணிக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூர் மாவட்டத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.க-வினர் குவிந்துள்ளனர். நிதியிலும், களப்பணியிலும் சம பலத்துடன் இருப்பதால் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து கொண்டிருக்கிறது.
ஒருபக்கம் தி.மு.க-வினர் கொலுசு, ஹாட்ஸ் பாக்ஸ், குக்கர், வேட்டி, சேலை, பணம் என்று அரவக்குறிச்சி பார்முலாவை இறக்கி அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளை கலங்கடித்து வருகிறது. கிட்டத்தட்ட 300 கிலோ கொலுசை ஆர்டர் செய்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டவுன்ஹால் அருகே வெளிப்படையாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த கரூர் தி.மு.க-வினரை பா.ஜ.க-வினர் கையும் களவுமாக பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திவருகின்றன.
வார்டுக்கு தகுந்தது போல ரூ.500 முதல் ரூ.2,000 வரை மாவட்டம் முழுவதும் தி.மு.க-வினர் பணப்பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்து வருகிறது. அ.தி.மு.க-விலும் ஆங்காங்கே வேட்டி, சேலை, பாத்திரங்களுடன் கரன்சியை இறக்கி வருகின்றனர். மறுபக்கம், கோவைக்கான தேர்தல் அதிகாரிகளும் சத்தமே இல்லாமல் மாற்றப்பட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்துக்கான தேர்தல் பார்வையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரியான மரியம் பல்லவி பல்தேவ் தமிழக அரசால் நியமிக்கப்பட்டிருந்தார். இதனிடையே, உடல்நலக்குறைபாடு காரணமாக அவர் மாற்றப்பட்டு ஹர் சகாய் மீனா என்பவர் கோவை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து கடந்த 12-ம் தேதி சொந்த காரணங்களுக்காக அவர் விடுமுறையில் சென்றதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக பவன்குமார் என்பவர் கோவை தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இரண்டு நாள்கள் மட்டுமே அவர் பணியாற்றினார். அவரும் மாற்றப்பட்டு, தற்போது கோவிந்த ராவ் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு வாரங்களுக்குள் 4 அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். அ.தி.மு.க, தி.மு.க போட்டியில் அதிகாரிகள் பந்தாடப்படுகின்றனர். இதனால் கோவை என்றாலே அதிகாரிகள் எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள்” என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.