குவாரிகள் வேலை நிறுத்த விவகாரம் – மணல் லாரி உரிமையாளர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை..!

சென்னை: குவாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு முதல்வருக்கு மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.முனிரத்தினம், அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் சுமார் 2,500 கல்குவாரிகள், 3 ஆயிரம் கிரஷர்கள் உள்ளன. புதிய சுரங்கக்கொள்கையின்படி இவற்றை இயக்குவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதிகாரிகளின் நெருக்கடியை கண்டித்து குவாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், தமிழகம் முழுவதும் 55 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. அனைத்து மாவட்டங்களிலும் கட்டுமான தொழில்கள் முடங்கியுள்ளன. குறிப்பாக, மெட்ரோ ரயில் பணிகள், குடிசை மாற்று வாரியப் பணிகள், தனியார் கட்டுமான நிறுவனங்கள், பொதுமக்கள் வீடு கட்டும் திட்டங்களில் ஜல்லி, எம்-சாண்ட் போன்றவை கிடைக்காமல்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2 நாட்களாக வேலைநிறுத்தம் நீடிக்கிறது. இது தொடர்ந்தால் குவாரி, கிரஷர், லாரி ஆகிய தொழில்களை நம்பியுள்ள 35 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். அரசுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

எனவே, இந்த விவகாரத்தில் முதல்வர், சுரங்கத் துறை அமைச்சர் தலையிட்டு, குவாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் குவாரிகள் விரைந்து செயல்பட நடவடிக்கை எடுத்து, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.