தெலுங்கு மொழியில் செம்மரக் கடத்தலின் பின்னணியில் எடுக்கப்பட்டு, அண்மையில் வெளியான புஷ்பா திரைப்பட பாணியில், ஒரு செம்மரக் கடத்தல் கும்பல் காவல்துறையிடமிருந்து தப்பியோடியுள்ளது.
ஆந்திர மாநிலத்திலிருந்து திருமண கோஷ்டியினர் போல நடித்து, தமிழக எல்லைக்குள் நுழைய முயன்ற 40 பேர் கொண்ட செம்மரக் கடத்தல் கும்பல், காவல்துறையினர் சோதனையிட முயன்றபோது, தப்பியோடியது.
இவர்கள் அனைவரும், தமிழகத்திலிருந்து சேஷாசலம் சென்று, செம்மரக் கடத்தலில் ஈடுபட்டுவிட்டு, மீண்டும் தமிழகத்தில் உள்ள தங்களது கிராமங்களுக்குத் திரும்புபவர்களாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
அந்தக் கும்பல், திருமண கோஷ்டியினர் போல, திருப்பத்தூரில் நடைபெறும் திருமணத்துக்கு வருவதாகக் கூறி பேருந்து ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர். நள்ளிரவு 1.45 மணியளவில், சந்திரகிரி காவல்நிலைய காவலர்கள், வாகனச் சோதனை நடத்திக் கொண்டிருந்த போது, அந்தப் பேருந்து அங்கே வந்துள்ளது.
காவலர்கள் வாகனச் சோதனை செய்வதைப் பார்த்த செம்மரக் கடத்தல் கும்பல், பேருந்திலிருந்து இறங்கி தப்பியோடியுள்ளனர்.
இவர்களை ஏற்றி வந்த பேருந்தின் ஓட்டுநரும், உதவியாளரும் கைது செய்யப்பட்டு விசாரணையில் வைக்கப்பட்டுள்ளனர். விசாரணையில், இந்த கும்பலுக்கும், பேருந்து ஓட்டுநருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், திருமணத்துக்குச் செல்வதாக வாடகைக்குப் பேருந்து எடுத்ததும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து, வனப்பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க செம்மரக் கடத்தல் கும்பல்கள் இதுபோன்று பல நூதன வழிகளைப் பின்பற்றி எல்லை தாண்டுகிறார்கள். அண்மையில் திருப்பதிக்கு நடந்து வருபவர்களைப் போல வேடமிட்டுக் கொண்டு, ஒரு கும்பல், வனப்பகுதிக்குள் நுழைய முயன்றது குறிப்பிடத்தக்கது.