கோவை மாநகராட்சி 13-வது வார்டுக்கு உட்பட்ட நஞ்சை கவுண்டன் புதூர் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதிக்கு பொதுமக்களுக்கு பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக இந்த பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட அந்த பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும்மாநகராட்சி எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மாலை கணபதி உடையாம்பாளையம் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களின் சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த மறியல் போராட்டத்தில் அந்த பகுதி கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, சுமதி ஆகியோரும் பங்கேற்றனர். மறியல் போராட்டத்தை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர் .அப்போது பொதுமக்கள் கோடைகாலம் தொடங்கும் முன்பே எங்கள் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. 10 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வழங்கபடுகிறது. ஆனால் தற்போது 15 நாட்களை கடந்தும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. எனவே வாரந்தோறும் குடிநீர் வழங்க வேண்டும். மேலும் நஞ்சை கவுண்டன் புதூர் பகுதிக்கு பில்லூர் 3-வது குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படாமல் விடுபட்டுள்ளது. உடனடியாக பிரதான குழாயில் இருந்து இணைப்பு வழங்க வேண்டும் என்றனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அந்த பகுதி மக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக குடிநீர் விநியோகம் செய்தனர். தொடர்ந்து பில்லூர் 3-வது குடிநீர் திட்டத்தில் இந்த பகுதிக்கு இணைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0