தொண்டர்களால் நிரம்பி வழிந்த சிவசேனா அணிகளின் பொதுக்கூட்டங்கள்… துரோகி என உத்தவ் தாக்கரே, ஷிண்டே புகார்..!

காராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு, முதல் முறையாக உத்தவ் தாக்கரே மற்றும் அதிருப்தி கோஷ்டி தலைவரும், மாநில முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே அணிகள் சார்பாக தனித்தனியாக மும்பையில் நேற்று இரவு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

உத்தவ் தாக்கரே வழக்கமாக நடக்கும் இடத்தில் தசரா பொதுக்கூட்டத்தை நடத்தினார். ஏக்நாத் ஷிண்டே பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் இக்கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, “துரோகிகளை தேர்தலில் தோற்கடிக்க சிவசேனா தொண்டர்கள் தயாராகவேண்டும். இன்றைக்கு நான் ஒன்றும் இல்லாதவனாக இருக்கலாம். ஆனால் உங்களது ஆதரவில் மீண்டும் கட்சி எழுச்சி பெறும். மகாராஷ்டிராவில் மீண்டும் சிவசேனா தொண்டர் ஒருவரை முதல்வராக்குவேன். நான் உடல் நலம் சரியில்லாமல் இருந்த போது நிர்வாகத்தை நடத்த கொடுத்தவர்கள் துரோகிகளாகவும், காட்டிக்கொடுப்பவர்களாகவும் மாறிவிட்டனர். நான் திரும்ப வரமாட்டேன் என்று அவர்கள் நினைத்தார்கள்.

ஒருவர் அல்லது இரண்டு பேரை மட்டும் கொண்டதல்ல சிவசேனா. உங்கள் அனைவரையும் சேர்த்ததுதான் சிவசேனா. நீங்கள் என்னுடன் இருக்கும் வரை நான் தலைவராக இருப்பேன். ஷிண்டே கட்சியை காட்டிக்கொடுப்பவராகவும் துரோகியாகவும் மாறிவிட்டார். துரோகி என்ற பட்டம் அவருக்கு ஒருபோதும் அழியாது. அது ஷிண்டேயிக்கு நிரந்தர பதவி ஆகும். ஒரு மனிதனுக்கு எவ்வளவு பேராசை இருக்கவேண்டும். முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுவிட்டது. இப்போது கட்சியும் வேண்டும் என்று விரும்புகிறார். எனது தந்தையை ஏக்நாத் ஷிண்டே திருடிக்கொண்டார். ஷிண்டேயுடன் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவை திருட போலி தாக்கரே முகமூடி அணிந்துள்ளனர். நாங்கள் முதலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்த போது அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறினர். நாங்களும் எச்சரிக்கையாகத்தான் இருந்தோம். ஆனால் கூட இருந்தவர்களே எங்கள் முதுகில் குத்திவிட்டனர். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எங்களுக்கு மரியாதை கொடுத்தது.

நாங்கள் பாஜக கூட்டணியை விட்டு விலகினாலும் இந்துத்துவாவை கைவிடவில்லை. பால் தாக்கரே பின்பற்றிய இந்துத்துவா கொள்கையை நாங்கள் பின்பற்றி வருகிறோம். அது குறித்து பாஜக மற்றும் ஷிண்டேயுடன் விவாதிக்கவும் தயாராக இருக்கிறோம். பாஜக எங்களுக்கு துரோகம் செய்ததால்தான் அவர்களுக்கு பாடம் கற்பிக்கவேண்டும் என்பதற்காக நாங்கள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தோம். ஒவ்வொரு ஆண்டும் தசராவுக்கு ராவணனை எரிப்போம். கட்சியை விட்டு சென்ற துரோகிகள் இந்த ஆண்டு ராவணனாக மாறியிருக்கின்றனர். நாட்டில் ஜனநாயகம் நிலைத்து நிற்குமா என்று தெரியவில்லை. பாஜக தலைவர் நட்டா பாஜக மட்டுமே இருக்கும் என்றும் மற்ற கட்சிகள் இருக்காது என்று பேசியிருக்கிறார். இது நாடு சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறது என்பதை காட்டுகிறது. மீண்டும் அடிமை முறை வரலாம்” என்று எச்சரித்தார்.

பாந்த்ரா-குர்லா காம்ப்ளஸில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டு பேசுகையில், “எங்களை துரோகிகள் என்று சொல்கிறார். 2019-ம் ஆண்டு தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நீங்கள் தான் துரோகம் செய்துவிட்டீர்கள். பால் தாக்கரே, நரேந்திர மோடியின் படத்துடன் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டு காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்து துரோகம் செய்துவிட்டீர்கள். பால் தாக்கரே கட்சியின் ரிமோட் கண்ட்ரோலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆனால் ஆயிரக்கணக்கான தொண்டர்களின் ரத்தத்தில் உருவான சிவசேனாவின் ரிமோட் கண்ட்ரோலை உத்தவ் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் கொடுத்துவிட்டார். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடம் சிவசேனாவை அடமானம் வைத்துவிட்டார். உத்தவ் தாக்கரே தாதர் சிவாஜி பார்க்கில் நின்று பேச எந்த வித தார்மீக உரிமையும் கிடையாது. பால் தாக்கரே வெறுக்கும் இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பால் தாக்கரே மட்டுமல்லாது கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்த சிவசேனா தொண்டர்களையும் அவமதித்துவிட்டார்கள். சிவசேனாவை மூடிவிடுவேன். ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என்று பால் தாக்கரே சொன்னார். ஆனால் அவரின் வார்த்தையை மீறி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தீர்கள். இப்போது நீங்கள் இந்துத்துவா பற்றி பேசக்கூட விரும்புவதில்லை. காங்கிரஸ் தொடரந்து சாவர்கரை எதிர்க்கிறது. ஆனால் நீங்கள்(உத்தவ்) அதற்காக எதையும் செய்யவில்லை. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பால் தாக்கரேயின் கொள்கைகள் மற்றும் கனவுகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இரண்டு பேரையும் உத்தவ் தாக்கரே விமர்சிக்கிறார்.

சிவசேனாவில் இருந்து வெளியேறவேண்டும் என்ற முடிவை நாங்கள் மகிழ்ச்சியுடன் எடுக்கவில்லை. மிகவும் வருத்தத்துடன் தான் இந்த முடிவை எடுத்தோம். இரண்டரை ஆண்டுகளாக மிகவும் கஷ்டப்பட்டோம். எனவேதான் இம்முடிவை எடுத்தோம். கட்சியை எனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்வதாக கூறப்படுவதில் உண்மையில்லை. நான் அதிகாரத்திற்கு ஆசைப்படுபவன் இல்லை” என்று தெரிவித்தார்.

ஷிண்டே உரையாற்றுவதை மும்பை புறநகர் ரயில் நிலையங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்தனர். மகாராஷ்டிரா முழுவதும் இருந்து வந்த தொண்டர்களால் தாதர் ரயில் நிலையம் நிரம்பி வழிந்தது. சிலர் நேற்று காலையிலேயே வந்து ரயில் நிலையத்தில் தங்கி இருந்தனர். மாநிலத்தின் கிராமப்பகுதியில் இருந்து கூட வயதானவர்கள் உத்தவ் தாக்கரேயிக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்தனர். ஷிண்டே கூட்டத்திற்கு இரண்டு லட்சம் பேரும், உத்தவ் கூட்டத்திற்கு ஒரு லட்சம் பேரும் வந்திருந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.