சிங்கப்பூரின் DS-EO உள்ளிட்ட மூன்று செயற்கைக் கோள்களுடன் PSLV – C53 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இதனையடுத்து, புதிதாக வடிவமைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டை இம்மாத இறுதியில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
வெளிநாட்டு செயற்கைகோள்களையும் வணிக ரீதியாக விண்ணுக்கு அனுப்பும் பணியை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சிங்கப்பூருக்கு சொந்தமான DS-EO, நியூசர், ஸ்கூப் – 1 ஆகிய 3 செயற்கைக்கோள்களை, PSLV-C53 ராக்கெட் மூலம் ஏவுவதற்கான 25 மணிநேர கவுண்டவுன் நேற்று முன்தினம் மாலை 5.02 மணிக்கு தொடங்கியது. திட்டமிட்டபடி நேற்று மாலை 6.02 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து, 3 செயற்கைக்கோள்களுடன் PSLV – C53 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
தொடர்ந்து, PSLV – C53 ராக்கெட் அடுத்தடுத்த நிலையை கடந்த பின்னர், 3 செயற்கைக் கோள்களும் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன. இந்த செயற்கைக்கோள்கள், நிலத்தின் வண்ண புகைப்படங்கள், கடல்சார் பாதுகாப்பு, பருவ நிலை தொடர்பான புகைப்படங்களை தெளிவாக எடுத்து அனுப்பவுள்ளன.
PSLV – C53 ராக்கெட்டின் வெற்றியை அங்கிருந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் கரகோஷம் எழுப்பி கொண்டாடி மகிழ்ந்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், PSLV – C53 ராக்கெட் வெற்றியை தொடர்ந்து அடுத்த கட்டமாக சிறிய ரக செயற்கை கோள்களை விண்ணில் ஏவுவதற்காக புதிதாக வடிவமைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டை இம்மாத இறுதியில் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.