தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கோவை மாநகராட்சி கமிஷனர் வழங்கல்..!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 80-வது வார்டு கெம்பட்டி காலனியில் தூய்மை
பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், அனைத்து வீடுகளுக்கும் தேசிய
கொடியினை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வழங்கினார்.
மாநகராட்சி சுகாதாரத்துறை தலைவர் மாரிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், துணைமேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி துணை கமிஷனர்
சர்மிளா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் ஆணைப்படி ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மட்டும்
நான்காவது சனிக்கிழமைகளில் தூய்மை பாரத மக்கள் இயக்கம் தொடர்பாக
விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக இன்று
மாநகராட்சி 80-வது வார்டுக்கு உட்பட்ட கெம்பட்டி காலனியில் இன்றைய
நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன. தூய்மை பணியாளர்கள் மிகவும் முக்கியமானவர்கள். கோவை மாநகர் முழுவதும் தூய்மையாக வைத்திருக்க உதவுபவர்கள். எனவே அவர்களுக்கு தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க தமிழக அரசின் உதவியுடன் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
மழை காலங்களில் தூய்மை பணியாளர்களுக்கு தேவைப்படும் ரெயின் கோட்
வழங்கப்பட்டுள்ளது. மேலும் கையில் அணியும் கிளவுஸ் போன்றவைகள் இன்று
வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 80 வது வாடை மாதிரி வார்டாக மாற்றுவதற்கு
உண்டான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சி சுகாதாரக்
குழு தலைவர் மாரிச்செல்வன் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
அவர் தனது வார்டான 80-வது வார்டில் உள்ள 4500-க்கும் மேற்பட்ட
வீடுகளுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வழங்குவதற்காக 2
குப்பை தொட்டிகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளார். அந்த குப்பைத்தொட்டிகள்
இந்த வார்டு பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் வழங்கப்படும்.
இதை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு கோவை மாநகராட்சிகளில் 100
வார்டுகளிலும் அனைத்து வீடுகளிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை
பிரித்து கொடுக்க வசதியாக இரண்டு குப்பை தொட்டிகள் வழங்கப்படும். கோவை
மாநகராட்சி தமிழகத்தின் முன்மாதிரி மாநகராட்சியாக மாற்றப்படும். மக்கள்
அனைவரும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.