காவல்துறை உயரதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதில் நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு காவல் துறை இயக்குநர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஐந்து காவல் துறை அதிகாரிகள் காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
உள்துறை செயலாளர் அமுதா, காவல் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியும் இடமாற்றம் செய்தும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கூடுதல் காவல் துறை இயக்குநர்களாக இருக்கும் ராஜீவ் குமார் ஐபிஎஸ், சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ், அபய்குமார் சிங் ஐபிஎஸ், வன்னியபெருமாள் ஐபிஎஸ் ஆகியோர் காவல் துறை இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
மேலும், குடிமைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் அருண், ஆவடி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பூக்கடை துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளராகவும், குற்ற ஆவணக் காப்பக எஸ்.பியாக உள்ள ஷ்ரேயா குப்தா பூக்கடை துணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், திருநெல்வேலி கிழக்கு துணை ஆணையர் சீனிவாசன் சென்னை காவல் ஆணையரக நிர்வாகப் பிரிவு துணை ஆணையராகவும், சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையர் ஹர்ஷ் சிங் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சசி மோகன் சென்னை க்யூ பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பல்லை பிடுங்கிய விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவணன் முன்னாள் திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் மாநில குற்ற ஆவணக் காப்பக எஸ்.பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செங்குன்றம் துணை ஆணையராக இருந்த மணிவண்ணன் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் மதுரை தெற்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சாய் பிரணீத் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த பிரதீப், மதுரை தெற்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.