பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக தொண்டாமுத்தூர் அரசு கல்லூரியில் பேராசிரியைகள் போராட்டம்.

கோவை தொண்டாமுத்தூரில் உள்ள அரசு கலை – அறிவியல் கல்லூரியில்  பேராசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து பலமுறை கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கும் எடுக்கப்படவில்லை. இதை யடுத்து அந்த பேராசிரியரை கண்டித்து அதே கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசிரியைகள், விரிவுரையாளர்கள் என மொத்தம் 17 பேர் நேற்று மாலை 5 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சம்பந்தப்பட்ட பேராசிரியரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அவர்களுக்கு ஆதரவாக பேராசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். இது பற்றி தகவல் அறிந்ததும் தொண்டாமுத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் கல்லூரி முதல்வர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது பேராசிரியைகள் தரப்பில் கல்லூரியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கட்டுப்பாட்டில் உள்ளது .அதனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்ய வேண்டும். கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம் இது போன்ற பாலியல் தொல்லை கொடுத்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் போலீசாரிடம் தெரிவித்தனர்.பேச்சுவார்த்தையின் முடிவில் வருகிற 27ஆம் தேதி கல்லூரியின் இணை இயக்குனர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியைகள் இரவு 9 மணிக்கு போராட்டத்தை கைவிட்டனர். பேராசிரியைகளின் திடீர் போராட்டம் காரணமாக தொண்டாமுத்தூர் கலை -அறிவியல் கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது. இவர்கள் போராட்டத்துக்கு மாணவ மாணவிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.