மதுரை: தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் ஆரோக்கியமானவையாக இல்லை. குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துவது, விவாகரத்து செய்வது, பழிவாங்கும் காட்சிகள்தான் அதிகமாக வருகின்றன. இது பார்வையாளர்களை தவறான பாதைக்கு வழிகாட்டுகின்றன. எனவே டி.வி. தொடர்களை முறைப்படுத்த சின்னத்திரை தணிக்கை வாரியத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுவழக்கு தொடரப்பட்டுள்ளது.இதற்கு மத்திய அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் முன்பு சினிமாக்கள் தான் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.இப்போது சீரியல்கள் மற்றும் அதில் வரும் கேரக்டர்கள், காட்சி அமைப்புகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்து கின்றன. அந்த சீரியலில் ப்ரோமோ எப்போது வரும் என்று காத்திருந்து பார்க்கும் மக்கள் மிக அதிகமாக உள்ளனர். தமிழ்நாட்டின் மிகப்பிரபலமான தொலைக்காட்சிகளில் ஓடும் சீரியலில் மாமியார்- மருமகள், கள்ளக்காதல், அடுத்தவரின் கணவருக்கு ஆசைப்படுவது, எப்படி மோசமாக பழிவாங்குவது என்று மிகவும் வில்லத்தனமாக இருக்கும். இதற்கு கடிவாளம் போட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருக்கிறது.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், சென்னை தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், “இந்தியா, நாகரிகம் மற்றும் கலாசாரம் மிகுந்த நாடு ஆகும். தமிழ்நாட்டு குடும்பங்களில் தவிர்க்க முடியாத இடத்தை டி.வி.க்கள் பிடித்து உள்ளன. பல்வேறு டி.வி. சேனல்களில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள், இளைஞர்களிடம் கடும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கவர்ச்சிகரமான ஆடைக ளுடன் தோன்றுதல், ஆபாச காட்சிகளும் அதிக அளவில் காணப்படுகின்றன. அதேபோல் தொலைக்காட்சி தொடர்களும் ஆரோக்கியமானவையாக இல்லை. குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துவது, விவாகரத்து செய்வது, பழிவாங்குவது போன்ற காட்சிகள்தான் அதிகமாக வருகின்றன. இது பார்வையாளர்களை தவறான பாதைக்கு வழிகாட்டுவதாக அமைகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் வரும் காட்சிகள் குழந்தைகளின் மனதில் அவர்களை அறியாமலேயே பதிகின்றன.
சில நிகழ்ச்சிகள், வக்கிரமான, வன்முறைகளை காட்சிப்படுத்துகின்றன. கேளிக்கை என்ற பெயரில் மக்களை தவறாக வழிநடத்துவதை ஏற்க இயலாது. எனவே டி.வி. தொடர்களை முறைப்படுத்த சின்னத்திரை தணிக்கை வாரியத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் சின்னத்திரை வாரியத்திடம் சான்றிதழ் பெற்று நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை உறுதிப்படுத்த வேண்டும்.. மீறினால் கடும் அபராதம் விதிக்கவும் உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்திருக்கிறார்கள்.