பிரதமர் மோடி பேச்சு… 79 முறை கைதட்டி ஆர்ப்பரிப்பு செய்த அமெரிக்க எம்.பி.க்கள்..!

மெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, ஆரம்பம் முதல் நிறைவு வரை எம்.பி.க்களின் கைத்தட்டல்களால் அமெரிக்க நாடாளுமன்றம் அதிர்ந்தது.

15 முறை எழுந்து நின்று பிரதமர் மோடியை பாராட்டி எம்.பி.க்கள் கைதட்டினர். 79 முறை இருக்கையில் அமர்ந்தவாறே கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

ஆளும் ஜனநாயக கட்சி எம்.பி.யான பிரமிளா ஜெயபால் பிரதமர் மோடியை மிக தீவிரமாக விமர்சித்து வருகிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அவர் உட்பட 75 எம்.பி.க்கள் இணைந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் அண்மையில் ஒரு கடிதம் அளித்தனர். அதில் “இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. இதுகுறித்து இந்திய பிரதமரிடம் எடுத்துரைக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசியபோது, பிரமிளா ஜெயபால் உட்பட அவரது அணியை சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சுருக்கமாக சொல்வதென்றால் இதுவரை இந்தியாவில் வீசிய மோடி அலை கரை கடந்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுனாமி பேரலையாக சுழன்றடித்தது.

 பிரதமர் மோடி தனது உரையின்போது, இந்திய, பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அத்துமீறல்களை, அந்த நாட்டின் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்தார். இலங்கை உள்ளிட்ட நாடுகளின் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி உதவி என்ற பெயரில் அந்த நாடுகளை சீனா கடனில் மூழ்கடிப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதை அந்த நாட்டின் பெயரை குறிப்பிடாமல் அவர் குற்றம் சாட்டினார். பிரதமர் மோடி பேசி முடித்த பிறகு அமெரிக்க எம்.பி.க்கள் அவரை சூழ்ந்து ஆட்டோகிராப் பெற்றனர்.

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்சென்ட் சர்ச்சில், தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு அடுத்து அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் 2-வது முறை பேசிய உலகத் தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.