பிரதமர் மோடி நாளை கோவை வருகை. 4000 போலீசார் பாதுகாப்பு. டிரோன்கள் பறக்க தடை

கோவை; தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடக்கிறது. இதை யொட்டி வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இது தவிர அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார். இதற்காக நாளை ( புதன்) கோவை வருகிறார் .அவர் நாளை மதியம் ஒரு மணிக்கு வேலூரில் இருந்து சிறப்பு விமான மூலம் கோவை வருகிறார். அங்கிருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் மேட்டுப்பாளையம் – அன்னூர் நால்ரோடு தென்திருப்பதி சாலையில் நடைபெறும் பொது கூட்ட மைதானத்திற்கு செல்கிறார். அங்கு நீலகிரி தொகுதியில் போட்டியிடும் மத்திய மந்திரி எல்.முருகன், கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை, பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் வசந்த ராஜன் ஆகிய 3 பேரையும் ஆதரித்து பேசுகிறார். பொதுக் கூட்டத்துக்கு பிரதமர் மோடி வருவதையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமரின் தனிப்பிரிவைசேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கோவையில் முகாமி ட்டு உள்ளனர். அவர்கள் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் வந்து இறங்கும் இடம் கோவை விமான நிலையத்தில் அவர் வரும் பகுதி ஆகிவற்றை ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் 60 அடி நீளம், 32 அடி அகலத்தில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் மேடை அமைக்கபட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் அமரும் வகையில் தரைத்தளத்தை தூய்மை செய்யும் பணி. மேற்கூரை அமைக்கும் பணியும் மோடி ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் இடத்தில் 3 தளங்கள் அமைக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது :-பிரதமர் மோடி நாளை கோவை வருவதை யொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன மேற்கு மண்டல ஐ ஜி பவானிஸ்வரி, கோவை சரக டி ஐ.ஜி. சரவண சுந்தர் ஆகியோர் மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது .அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் .பிரதமர் மோடி வருகை ஒட்டி மேட்டுப்பாளையம் அன்னூர் நால்ரோடு தென்திருப்பதி சாலையில் பொதுக்கூட்ட மைதானத்திலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.