சிறப்பு விருந்தினர் எகிப்து அதிபரை வரவேற்ற பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர்..!

புதுடெல்லி: எகிப்து அதிபர் அல் சிசிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும், பிரதமர் நரேந்திர மோடியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நாட்டின் 74வது குடியரசு தினம் நாளை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக எகிப்து அதிபர் அல் சிசி நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை டெல்லி வந்தடைந்தார். விமான நிலையத்தில் நாட்டுப்புற நடனக் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் எகிப்து அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவும் டெல்லி வந்துள்ளது.

4 நாள் பயணமாக டெல்லி வந்த அல் சிசி, இன்று குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றார். அங்கு அவரை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும், பிரதமர் நரேந்திர மோடியும் கைகுலுக்கி வரவேற்றனர். இதையடுத்து, 21 குண்டுகள் முழங்க எகிப்து அதிபர் அல் சிசிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து, அல் சிசிக்கு பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்தார். இதேபோல், டெல்லி வந்துள்ள எகிப்து தூதுக் குழுவினரை பிரதமர் நரேந்திர மோடிக்கு அல் சிசி அறிமுகப்படுத்தினார்.

நாளை நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் அல் சிசி, இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் முப்படைகளின் அணிவகுப்புகளைப் பார்வையிட உள்ளார். இந்த அணிவகுப்பில், எகிப்தின் ராணுவ வீரர்களைக் கொண்ட குழுவும் பங்கேற்க இருக்கிறது. எகிப்து அதிபரின் இந்த பயணத்தின்போது, இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.