டெல்லி: பஞ்சாயத்து ராஜ் தினமான ஏப்ரல் 24ல் பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் சென்று பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை அவர் துவக்கி வைக்க உள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370யை ரத்து செய்தபிறகு அவர் முதன் முதலாக அங்கு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் ஏப்ரல் 24ல் இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1992ல் 73வது அரசியலமைப்பு திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதை நினைவு கூறும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆண்டுதோறும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பஞ்சாயத்து உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.
அதன்படி இந்த ஆண்டு ஏப்ரல் 24ல் பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளார். அப்போது அவர் பல தொழில் திட்டங்களை துவங்கி வைக்கிறார். மேலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதுதவிர மாவட்ட, பஞ்சாயத்து வளர்ச்சி கவுன்சில்களுடன் கலந்துரையாடுகிறார்.
முன்னதாக ஜம்மு காஷ்மீரின் தொழில் முதலீடுகளை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தொடங்குவார் என்று கடந்த மாதம் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா கூறினார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக அங்கு சென்று வளர்ச்சி பணிகளை துவங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பணிகள் துவங்கி உள்ளன.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370யை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது. அதன்பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலமானது ஜம்மு-காஷ்மீர் , லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பிறகு முதன் முதலாக பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் செல்ல இருக்கிறார்.
இதற்கு முன்பு 2019 பிப்ரவரி 3ல் ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் லடாக் உள்ளிட்ட மூன்று பகுதிகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்து ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்திருந்தார். அதன்பின் வளர்ச்சி திட்டம் உள்பட பிற காரணங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி அங்கு செல்லவில்லை. மாறாக 2019 அக்டோபர் 27 ல் ரஜோரி, 2021 நவம்பர் 3ல் ஜம்மு நவ்ஷேரா செக்டார் எல்லைகளில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.