வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதற்காக தொடங்கப்பட்ட ஆபரேஷன் கங்கா பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
இந்தியா மீட்பு பணியின் போது 18 நாடுகளில் இருந்து 147 வெளிநாட்டினரையும் வெளியேற்றியது என்று அவர் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ராஜ்யசபாவில் கூறினார்.
உக்ரைனில் நடந்து வரும் மோதலின் போது, ஆபரேஷன் கங்கா நடவடிக்கையைத் தொடங்கியதாகவும், அதன் மூலம் மிகவும் சவாலான மீட்பு பணியை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார். தீவிரமாக நடந்து வரும் மோதலால் சவால்கள் இருந்தபோதிலும், சுமார் 22,500 குடிமக்கள் பத்திரமாக வீடு திரும்பியதை நாங்கள் உறுதி செய்துள்ளோம் என்று ஜெய்சங்கர் கூறினார், உக்ரைனில் இன்னும் சில பேர்சிக்கித் தவிக்கின்றனர். “நாங்கள் அவர்களைக் கண்காணித்து வருகிறோம்” என்று கூறினார்.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களில் பெரும்பாலானோர் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பைத் தொடரும் மாணவர்கள் என்றும், அவர்கள் நாடு முழுவதும் பரவியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார். உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் ஜனவரி 2022 இல் இந்தியர்களுக்கான பதிவு திட்டத்தை தொடங்கியது. சுமார் 20,000 இந்தியர்கள் பதிவு செய்திருந்தனர்.
கார்கிவ், சுமியில் இருந்து மாணவர்களை வெளியேற்றுவது மிகவும் சவாலானது என்றும், பிரதமர் மோடியின் தலையீட்டால்தான் சுமி பகுதியில் மீட்பு திட்டம் நிறைவேறியது என்றும் கூறினார்.
மோதலில் சிக்கிய மாணவர்கள் சுமி நகரில் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தால் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். இந்தியர்களுடன், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த மாணவர்களும் மீட்கப்பட்டனர். சுமியில் சிக்கியுள்ள இந்தியர்களை வெளியேற்ற பாதுகாப்பான பாதையை ஏற்படுத்தி தருமாறு உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசிய பின்னரே சுமியில் மீட்பு பணி வேகமெடுத்தது. ஆபரேஷன் கங்காவின் கீழ் நேபாள, வங்கதேச, பாகிஸ்தானியர்களைத் தவிர, துனிசிய மாணவர்களும் கூட மீட்கப்பட்டனர்.