அம்பேத்கர் வழியில் பிரதமர் மோடி சீர்திருத்தங்களை செய்து வருகிறார் – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி..!

ம்பேத்கர் வழியில் சீர்திருத்தங்களை பிரதமர் மோடி செய்து வருகிறார் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி சென்னை துறைமுகத்தில் அமைந்துள்ள அவரின் திருவுருவ சிலைக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் இராஜாஜி சாலையில் நாட்டுப்புறக் கலைஞர்களுடன் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்துயாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த மிகப்பெரிய சிற்பியான அண்ணல் அம்பேத்கர், பொருளாதார நிபுணராகவும், நீர்நிலை மேலாண்மையில் வல்லுனராகவும் விளங்கியவர் என்றார்.

அம்பேத்கர் வழியில் பல்வேறு சீர்திருத்தங்களை பிரதமர் மோடி செய்து வருகிறார். அம்பேத்கார் பிறந்த இடம், லண்டனில் அவர் படித்த வீடு, மும்பையில் வாழ்ந்த இல்லம், அவர் டெல்லியில் மறைந்த இடம் உள்பட அம்பேத்கரின் 5 இடங்களை புனித தலங்களாக்கி பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார் என எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னை துறைமுக ஆணையத் தலைவர் சுனில் பாலிவால், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்டோரும் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.