சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரை பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.7ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால், வீடுகளில் இருந்து பதறியடித்தபடி வெளியே வந்த மக்கள், வீதிகளில் தஞ்சமடைந்தனர். நடுநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டதா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா பகுதியிலும் 6.4 ரிக்டரில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி காலையில் இந்தோனேசியாவில் இருக்கும் சுமத்ரா தீவின் கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆழிப்பேரலைகள் பொங்கி எழுந்தன. இதனால், சுனாமி ஏற்பட்டு இந்தியா உட்பட 14 நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். டிசம்பர் 25ஆம் கிறிஸ்மஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய மக்கள் மறுநாள் விடுமுறை என்பதால் அதிகாலையில் கடற்கரைகளில் திரண்டிருந்தனர். மேலும், ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் வாங்குவதற்கும் அதிகளவில் கூட்டம் கடற்கரைகளில் கூடியது. முதியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என பெரும்பாலானோர் கடற்கரைகளில் திரண்டிருந்தனர்.
அப்போது, காலை 6.29 மணியளவில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 8.9 ரிக்டர் அளவில் பதிவாகியது. அதனால், ஏற்பட்ட ஆழிப்பேரலைகள் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து என பல நாடுகளை பயங்கரமாக தாக்கியது. இதில் கடற்கரைகளிலும், கடற்கரை ஓரங்களில் இருக்கும் நகரங்களிலும் வசித்த மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் நீரில் மூழ்கி பலியாகினர். இந்தியாவிலும் கணக்கிட முடியாத இழப்புகளை சுனாமி பேரலை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தியாவில் அதிகமாக பாதிப்படைந்தது தமிழகம்தான்.
தமிழகத்தின் நாகை, சென்னை, கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கன்னியாகுமரியில் இருக்கும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை உயரத்திற்கு அலைகள் சீறி எழுந்தன. தமிழகத்தில் மிக அதிகமாக நாகை மாவட்டம் பாதிப்புக்குள்ளானது. மாவட்டத்தில் இருக்கும் 38 கிராமங்கள் முழுவதுமாக கடல் நீரில் மூழ்கின. மொத்தமாக நாகை மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரம் பேர் சுனாமி பேரலைக்கு உயிரிழந்தனர். சுனாமியில் தங்கள் உறவுகளையும், உடைமைகளையும் இழந்த மக்கள் இன்றளவும் அந்த கோர சம்பவத்தில் இருந்து நீங்க முடியாமல் தவித்துதான் வருகின்றனர்.