திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் காவல்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை அறிக்கை..!

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல் காவல்துறை தனது தன்மையை இழக்க தொடங்கிவிட்டது என அண்ணாமலை அறிக்கை.

உடல் சோர்வுடனும் மனச்சோர்வுடனும் காவல்துறையில் பணியாற்றி வரும் சகோதர சகோதரிகளின் உண்மையான பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு திமுக அரசு செயல்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘பண்டிகை நாள், விடுமுறை நாள், திருமண நாள், குழந்தைகளின் பிறந்த நாள் என்று எந்த தினமாக இருப்பினும் மக்களை காக்கும் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள மக்கள் குறை தீர்ப்பாளர்கள் நமது காவல்துறை நண்பர்கள்.

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல் காவல்துறை தனது தன்மையை இழக்க தொடங்கிவிட்டது. காவல்துறை கோபாலபுரம் குடும்பத்திற்கும், திமுக அமைச்சர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை கையாளும் ஏவல் துறையாக மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது.

காவல்துறையினரை தரம் தாழ்த்தி திமுகவுடன் நடத்துவதை கண்கூடாகவே பல இடங்களில் பார்த்தோம். திமுக கவுன்சிலரின் கணவர் என ஒருவர் காவலரிடம் தரக்குறைவாக பேசுவது இணையத்தில் வயதானது அனைவரும் அறிந்ததே.

திமுக ஆட்சியில் காவல்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் நிலவி வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இப்படி இருக்கையில் காவல்துறையினர் தங்கள் கடமையை திறம்பட செய்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

மேலும் தமிழகத்தில் காவல்துறையில் உள்ள சுமார் 12,000 காலியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்பிட வழிவகை செய்ய வேண்டும். வெள்ளையர்களின் காலம் முதல் இன்று வரை காவல்துறையின் மாண்பை சீரழித்த ஆட்சிகள் சீரழிந்து போனது. வரலாறு நமக்கு கற்பிக்கும் பாடம்.

சாமானிய மக்களின் அரணாகவும் நமது நாட்டின் சட்ட திட்டங்களை தாங்கி பிடிக்கும் தூணாகவும் இருக்கும் நமது காவல்துறை நண்பர்கள். அரசியல் குறுக்கீடுகள் இன்றி காவல்துறையினர் சுதந்திரமாக பணியாற்றும் சூழலை உருவாக்குவது காலத்தின் கட்டாயமும், அரசின் கடமை ஆகும் என தெரிவித்துள்ளார்.