கோடநாடு பங்களாவில் போலீசார் திடீர் ஆய்வு – மேனேஜருக்கு பறந்த உத்தரவு..!

நீலகிரி : கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு போலீசார் கோடநாட்டில் ஆய்வு நடத்தியதோடுகோடநாடு எஸ்டேட் பங்களாவின் மேலாளர், அங்கு பணிபுரியும் காசாளர் மற்றும் கணக்கீட்டாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அவர்கள் வெளியூர் செல்ல கூடாது என வலியுறுத்தி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளகோடநாடு பகுதியில் 2017 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடைப்பெற்றது.

இது தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு அனைவரும் தற்போது ஜாமினில் உள்ளனர். இந்த வழக்கு கடந்த ஐந்தாண்டு காலமாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

வழக்கினை மறுவிசாரணை செய்ய அப்போதைய மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா தனிப்படை காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இதற்காக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி முதல் தற்போது வரை 316 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். குறிப்பாக குற்றம் சாட்டப்பட்ட 10 பேர், மேலும் வாகன விபத்தில் இறந்த கனகராஜன் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் மற்றும் கோடநாடு மேலாளர் நடராஜ், சசிகலா, சசிகலா உறவினர் விவேக், தற்கொலை செய்துகொண்ட கோடநாடு கணினி பொறியாளர் தினேஷின் தந்தை போஜன் உள்ளிட்ட பலரிடமும் இந்த விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி தமிழக டிஜிபி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். இதனால் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை 316 பேரிடம் சேகரிக்கப்பட்ட வாக்கு மூலங்கள் மற்றும் கைப்பற்றபட்ட 1500 பக்க ஆவணங்களை தனிபடை ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி சீல் வைக்கபட்ட கவர்களில் வைத்து நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை ஆவணங்களின் ஒரு நகல்கள் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து நகல்களை பெற்றுச் சென்றனர். இதனைத் தொடர்ந்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் மூலம் சிபிசிஐடி போலீசார் விரைவில் விசாரணையை துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில்,

கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு போலீசார் கொடநாட்டில் ஆய்வு மேற்கொண்டு, கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொடநாட்டிற்க்கு சென்ற சிபிசிஐடி போலீசார் மேலாளர் நடராஜிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து அங்கு பணிபுரியும் காசாளர் மற்றும் கணக்கீட்டாளர் ஆகியோரிடமும் விசாரணை மேற்க்கொண்டுள்ளனர். மேலும் கூடுதல் விசாரணைக்காக ஓரிரு நாட்களில் மீண்டும் கொடநாடு வர உள்ளதாகவும், எனவே மேலாளர் மற்றும் காசாளர் யாரும் வெளியூருக்கு செல்லக் கூடாது என வலியுறுத்தி சென்றதாக கூறப்படுகிறது.