திருப்பதியில் நடந்த பிரச்சனைக்கு போலீசும், தேவஸ்தானமும் தான் காரணம்.. கொதிக்கும் பக்தர்கள்.

திருப்பதி: வைகுண்ட ஏகாதேசி வரும் வெள்ளிக்கிழமை(ஜன. 10) கொண்டாடப்படும் நிலையில், அன்று திருப்பதி திருமலையில் ஏழுமலையான தரிசிப்பதற்கு பல பக்தர்கள் விரும்பினார்கள். இந்நிலையில் வைகுண்ட ஏகாதசிக்கான இலவச தரிசன டோக்கன்கள் வாங்க வரிசையில் நின்று, இன்று கூட்ட நெரிசலில் சிக்கிஇதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு போலீசும், தேவஸ்தானமும் தான் காரணம் என பக்தர்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 10-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. இந்த 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்பதால் பலரும் ஏழுமலையான தரிசிக்க பலரும் ஆர்வமாக உள்ளார்கள். ஜனவரி 10ம் தேதி அன்று புரோட்டோகால் தரிசனம் 10-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கும், சர்வ தரிசனம் 8 மணிக்கும் தொடங்கும். அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீ தேவி பூதேவியுடன் மலையப்பசுவாமி தங்க ரதத்தில் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார்.மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை மலையப்ப சுவாமி வாகன மண்டபத்தில் பக்தர்களுக்கு தரிசனம் செய்யவிருக்கிறார்.

இந்நிலையில் திருப்பதியில் 8 மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 90 கவுண்ட்டர்களிலும், திருமலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மையத்தில் 4 கவுண்ட்டர்களிலும் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது. நாளை காலை 5 மணிக்கு 10, 11 மற்றும் 12-ந் தேதிகளில் தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கு 1.20 லட்சம் டோக்கன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சாதாரண பக்தர்களுக்கு 13-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தினமும் டோக்கன் வழங்கப்படுகிறது. 10 நாட்களுக்கு 4.32 லட்சம் சர்வ தரிசன டோக்கன்கள் வினியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

10 நாட்கள் சொர்க்க வாசல் தரிசனத்திற்காக ஏற்கனவே 1.40 லட்சம் சர்வ தரிசன டோக்கன்கள், 19,500 ஸ்ரீவாணி டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டிருந்தது. அதேபோல் சொர்க்கவாசல் திறப்பு நேரத்தில் புரோட்டோகால் பிரமுகர்கள், வி.ஐ.பி. பிரேக் தரிசனம், குழந்தைகள், முதியோர்கள் தரிசனம் 10 நாட்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது . மேலும் திருமலையில் தங்குமிட வசதிகள் குறைவாக இருப்பதால், தரிசன டோக்கன் உள்ள பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

10 நாட்களில் சொர்க்க வாசல் வழியாக ஒட்டுமொத்தமாக 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி நாளில் சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கான சர்வ தரிசன டோக்கன்கள் விஷ்ணு நிவாசம் வளாகத்தில் நாளை வழங்கப்படுவதாக இருந்தது. இதை பெறுவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று இரவு காத்திருந்தனர். அப்போது டோக்கன்களைப் பெற நின்ற கூட்டத்தினரிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உள்பட இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த அனைவரும் உடனடியாக கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம் அடைந்துள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. பல பக்தர்கள் போலீஸ் மீதும், திருப்பதி தேவஸ்தானத்தின் மீதும் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். பக்தர்கள் அளித்த பேட்டி ஒன்றில், எல்லா போலீஸ் அதிகாரிகளும் பிச்சைக்காரர்கள் போல் பார்த்தார்கள். மோசமான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாகவே இவ்வளவு நெரிசல் ஏற்பட்டது. எந்த தலைவர்களும் வரவில்லை.. எங்களை பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை என்று கூறினார்கள். இன்னொரு பக்தர் கூறும் போது, முழுக்க முழுக்க இந்த பிரச்சனைக்கு தேவஸ்தானமும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தாத போலீசும் தான் காரணம் என்று கூறினார்.