பிரதமர் மோடி: எதிர்க்கட்சிகளுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு ஒன்றிய அரசு தயாராக உள்ளது…

டெல்லி: எதிர்க்கட்சிகளுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு ஒன்றிய அரசு தயாராக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி; இது மிகவும் மகத்துவமான ஒரு கூட்டத்தொடர். எதிர்க்கட்சிகளுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு ஒன்றிய அரசு தயாராக உள்ளது. விவாதங்கள் தீவிரமாக இருக்கலாம், இடையூறு செய்வதாக இருக்கக் கூடாது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் பதிவாகிக்கொண்டுதான் இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் செயல்பாடுகளை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஜனநாயகத்தை சிறுமைப்படுத்தக்கூடாது. பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்து கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாளை இடைக்கால பட்ஜெட்டில் பல துறைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும். கடைசி கூட்டத் தொடர் என்பதால் இதனை யாரும் புறக்கணிக்க வேண்டாம். தேர்தலுக்கு பிறகு தமது தலைமையிலான பாஜக அரசு மீண்டும் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இது தேர்தல் கால பட்ஜெட் என்பதால், முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. அனைத்து துறைகளிலும் நாடு வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது. குடியரசு தின விழா அணிவகுப்பில் பெண்களின் வலிமை பறைசாற்றப்பட்டது. மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது மகத்தான சாதனை இவ்வாறு கூறினார்.