புதுடெல்லி: குடியரசு தினத்தன்று அயோத்தியில் உள்ள ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கியது. ராமர் கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020 ஆகஸ்ட் 5-ம் தேதி அடிக்கல் நாட்டினார். 2024-ம் ஆண்டில் கோயிலை பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கும் வகையில் அங்கு கட்டுமானப் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
கோயில் கட்டுமானப் பணிகள் 60 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக ராமர் கோயில் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் கடந்த வெள்ளிக்கிழமை கூறினார். இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘கோயிலின் தரை தளம் மற்றும் முதல் தளம் 2024 ஜனவரிக்குள் தயாராகி விடும். வரும் டிசம்பர் 21 மற்றும் அடுத்த ஆண்டு மகர சங்கராந்திக்கு இடையில் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். இதன் பிறகு கோயில் பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்படும்’ என்றார்.
இந்நிலையில் வரும் 26-ம்தேதி குடியரசு தினத்தன்று அயோத்தி ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
தற்கொலைப் படை தீவிரவாதி மூலம் தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகம்மது திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக நேபாளம் வழியாக இந்தியாவுக்கு தற்கொலைப் படையை அனுப்ப அந்த அமைப்பு முயன்று வருவதாகவும் அத்தகவல் தெரிவிக்கிறது.
இந்தியாவில் ஜெய்ஷ் இ முகம்மது பல தாக்குதல்களை நடத்தியுள்ளது. கடந்த 2019-ல் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றது. தற்கொலைப் படை மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 2016-ல் பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் விமானப் படை தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஜெய்ஷ் இ முகம்மது நடத்திய இந்த தாக்கு தலில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.