பொள்ளாச்சி: ‘பொள்ளாச்சியில், 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்’ என, போலீஸ் ஸ்டேஷனுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி குமரன் நகரில், பா.ஜ., ஹிந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளின் வாகனங்கள், 22ம் தேதி சேதப்படுத்தப்பட்டன. வாகனங்களின் மீது டீசல் பாக்கெட்டுகளை வீசி தீ வைக்க முயற்சித்த சம்பவம் நடந்தது. முதற்கட்டமாக ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பினர் மூவரை தனிப்படையினர் கைது செய்தனர். மேலும் சிலரை கைது செய்ய, போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி போலீசாருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில், ‘பொள்ளாச்சியில், 16 இடங்களில், பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டு வீசப்படும். காவல் துறை எங்களுக்கு எதிரியல்ல. சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த வேண்டும்’ என, எஸ்.டி.பி.ஐ., – பி.எப்.ஐ., குமரன் நகர் என எழுதப்பட்டுள்ளது. அதை யார் அனுப்பியது என்ற விபரங்கள் எதுவும் குறிப்பிடாமல், போலீஸ் ஸ்டேஷனுக்கு தபாலில் வந்துள்ளது. இது குறித்து, போலீசார் விசாரிகின்றனர்.
மாவட்ட எஸ்.பி., பத்ரி நாராயணனிடம் கேட்டபோது, ”பொள்ளாச்சி மேற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த கடிதம் குறித்து விசாரிக்கப்படுகிறது. வாகனங்களை சேதப்படுத்திய வழக்கில் மேலும் இருவரை பிடித்து விசாரிக்கிறோம். இது குறித்து அறிக்கை வழங்கப்படும்’ என்றார்.