பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட வேண்டும் என்பதே மக்கள் விருப்பம் – அண்ணாமலை தகவல்..!

ராமேசுவரம்: பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட வேண்டும் என மக்கள் விரும்புவதாக நடைபயணத்தின்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தை ராமேசுவரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து சனிக்கிழமை ராமேசுவரம், மண்டபம், ராமநாதபுரம் பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை, நேற்று முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி பகுதிகளில் நடைபயணம் சென்றார்.

முதுகுளத்தூரில் அவர் பேசியதாவது: 2024-ம் ஆண்டில் பாஜக மீண்டும் வெற்றிபெற்று மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும். கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் ஏழை மக்களுக்காகவே மோடி பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகால திமுக ஆட்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் எதுவும் நடைபெறவில்லை. மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

வறட்சி மாவட்டமாக உள்ள ராமநாதபுரத்தின் குறைகளைத் தீர்க்க பிரதமர் மோடி இங்கு போட்டியிட மக்கள் விரும்புகின்றனர். வரும் மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இருந்து பாஜக வேட்பாளர் மக்களவைக்கு செல்ல வேண்டும்.

தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடந்து வருகிறது. தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். பிரதமர் மோடி 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என்றார். இதுவரை 5.5 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நடைபயணத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் தரணி முருகேசன், சிறுபான்மைப் பிரிவு தேசியச் செயலாளர் வேலூர் இபுராகிம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.