ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட விளாமுண்டி வனப்பகுதியில் ஏராளமான புள்ளி மான்கள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக சத்தியமங்கலம் – மேட்டுப்பாளையம் சாலை அமைந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் மான்கள் கூட்டம் கூட்டமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் மாலை பவானிசாகர் அருகே விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு புள்ளிமான் சீரங்கராயன் கரடு அருகே சத்தியமங்கலம் – மேட்டுப்பாளையம் சாலையை கடக்க முயன்றுள்ளது. அப்போது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் புள்ளிமான் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே மான் பலியானது. அவ்வழியே சென்ற பயணிகள் சாலையில் புள்ளிமான் ரத்தக்காயத்துடன் இறந்து கிடப்பதை கண்டு உடனடியாக விளாமுண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் சாலையில் அடிபட்டு இறந்து கிடந்த மானின் உடலை மீட்டு வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். புள்ளிமான் மீது மோதி விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0