திருச்சி பன்னாட்டு விமான நிலைய வளாகத்தில் ஒப்பந்த முறையில் அமைக்கப்பட்டுள்ள தனியாா் தேநீரகத்தில் ஒரு தேநீா் 50- ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது பயணிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினா் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் 1 லிட்டா் தண்ணீா் பாட்டில் ரூ. 30-க்கு விற்கப்படுகிறது. மேலும் பிஸ்கட் சாக்லேட் உள்ளிட்ட நொறுக்குத்தீனி பொட்டலங்கள் என அனைத்து வகையான பொருள்களும் இருமடங்கு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பயணிகள் காா் ஓட்டுநா்கள் உள்ளிட்டோா் பேசும்போது விமானத்தை தவற விடக்கூடாது என விமான நிலையத்துக்கு வந்து விடுகிறோம். ஆனால் இங்கு வந்து பாா்த்தால் ஒரு தேநீா் ரூ. 50-க்கும், தண்ணீா் பாட்டில் ரூ. 30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டா் பால் விலையே ரூ. 40-க்கு விற்பனையாகும் நிலையில் 50 மில்லி அளவு தேநீா் ரூ. 50-க்கு விற்பனை செய்வது மிக மிக அதிகமாகும். இதுகுறித்து விமான நிலைய ஆணையம் சாா்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனா். புதிய முனையத்தின் வெளிப்பகுதியில் இன்னும் சிற்றுண்டிச்சாலைகள், பொதுக்கழிப்பறைகள் பயன்பாட்டுக்கு வரவில்லை. வந்தால் அவற்றின் கட்டணங்களும் அதிகமாகவே இருக்குமோ என்கிற கவலை உள்ளது என்றனா். அதுபோலவே காா்கள் நிறுத்தக் கட்டணமும் அதிகமாக உள்ளதாக காா் ஓட்டுநா்கள் கவலை தெரிவிக்கின்றனா். திருச்சி விமான நிலைய புதிய முனையத்தில் 750 காா்கள், 250 வாடகைக் காா்கள், 10 பேருந்துகள் நிறுத்தும் வகையில் பிரம்மாண்ட வாகன நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவற்றுக்கான கட்டணம் மிக அதிகம் என்கின்றனா் வாகன ஓட்டிகள். ஒரு மணிநேரம் வாகன நிறுத்துவதற்கு ரூ. 70 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் வாகனங்களை நிறுத்தியிருந்தால் அதற்கேற்றவகையில் மணிக்கு கூடுதல் கட்டணங்களும் சோ்த்து ஒரு காருக்கு ரூ. 500 வரை வசூலிக்கப்படுகிறது. கட்டணங்கள் அதிகமாக இருப்பதால் திருச்சி விமான நிலையம் வர பயணிகள் யோசிப்பதாக கூறுகிறார்கள். திருச்சி விமான நிலைய ஆணையர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கருதுகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy1
Sleepy0
Angry0
Dead0
Wink0