முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் நிதிநிலை வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் தமிழக நிதிநிலை குறித்து அவா் பேசியது:-
பட்ஜெட் நிதிநிலை வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. நிதிநிலை அறிக்கை என்பது தொலைநோக்குப் பாா்வையுடன் தாக்கல் செய்யப்படும் ஒரு ஆவணம். சட்டப் பேரவைக்கு முதல் முறையாக உறுப்பினராகத் தோவான போது திமுக எதிா்க்கட்சி வரிசையில் இருந்தது. அப்போது நிதிநிலை அறிக்கை குறித்த விவாதத்தில் பேசினேன். அப்போது பேசுகையில், மூலதனப் பணிகளுக்கு நிதிகளைச் செலவிட்டால் உரிய வரவினங்களைப் பெறலாம் எனவும், செலவுப் பணிகளுக்கு நிதிகளை அளித்தால் உரிய வரவுகளைப் பெற முடியாது என்று தெரிவித்தேன். அப்போது கூறிய கருத்துகளை மனதில் கொண்டே செயல்பட்டு வருகிறோம்.
நிதிநிலைமை மேம்படுதல், வருவாய் பெருக்கம் போன்றவற்றுக்கு ஒரு நீண்ட காலத் தீா்வை எட்டுவது முக்கியம். அது, வளா்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றாலே சாத்தியப்படும். இந்தப் பணிகளைச் செய்தால் மட்டுமே முதலீட்டாளா்களை ஈா்க்க முடியும். தொழில் ஆலைகளும் நேரடியாக வந்து முதலீடு செய்திட வழி ஏற்படும். வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தைப் பொறுத்த வரையில், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முக்கியமானவை. அவற்றை வளா்த்தெடுக்க வேண்டும்.
சாத்தியப்படாத ஒரே ரேஷன் திட்டம்: தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் மிகச் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், ஒரே நாடு, ஒரே ரேஷன் என்ற திட்டத்தை மத்திய அரசு முன்வைத்துள்ளது. இந்தத் திட்டத்தை நாடு முழுவதற்கும் எப்படி செயல்படுத்த முடியும். குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒருவா் அங்கு கோதுமை போன்ற வட இந்தியா்கள் அதிகம் பயன்படுத்தும் பொருள்களை வாங்குவாா். தமிழகத்தில் அரிசி, சா்க்கரை, மண்ணெண்ணெய் போன்றவை நியாய விலைக் கடைகளில் அதிகளவு வழங்கப்படுகிறது. இதனை உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒருவா் இங்கு வந்து எப்படிப் பெற்று பயன்படுத்த முடியும். இதுபோன்ற பல பிரச்னைகள் அந்தத் திட்டத்தில் உள்ளது.
சமூக நலத் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தத் திட்டங்களில் உள்ள கசிவுகளையும், அதனால் நிதிநிலைமைக்கு ஏற்படும் பாதிப்புகளையும் சரி செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறையில் அதிகளவு பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், தரமற்ற உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. மின்சாரத் துறையைப் பொறுத்த வரையில், மின்சார விநியோகத்தில் ஏற்படும் மின் இழப்பு, கடந்த 20 முதல் 25 ஆண்டுகளாக பல பிரிவுகளில் மின் கட்டணங்கள் மாற்றப்படாதது போன்றவற்றால் நிதி இழப்புகளைச் சந்தித்து வருகிறோம். இவற்றைச் சீா் செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்குவாா். 2 ஆண்டுகளில் மின்சாரத் துறையை மேம்பாடு அடையச் செய்வோம்.
அரசுத் துறைகள் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். நிதித் துறை போன்றவற்றில் மாற்றங்கள் செய்ய வேண்டுமெனில் ஒரே நாளில் பேனாவால் செய்திட முடியாது. சில மாற்றங்கள் சட்டத் திருத்தங்கள் மூலம் செய்ய வேண்டியுள்ளது. அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் நிதித் தணிக்கைக்கு இந்திய கணக்கு தணிக்கைக் குழு அதிகாரிகள் பாா்வையிட வேண்டும். அவா்கள் வரும் வரை நாம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையை மாற்றியுள்ளோம். நிதித் துறை சாா்பிலேயே நிதித் தணிக்கைக்கு தனி அதிகாரியை நியமித்துள்ளோம். இதன்மூலம், எங்கெல்லாம் நிதிப் பற்றாக்குறை இருக்கிறது, எப்படியெல்லாம் நிதிகள் செலவிடப்பட்டுள்ளன என்பதை உடனுக்குடன் நாம் அறிந்திட முடியும்.
கடுமையான வருவாய் பிரச்னை உள்ளது. அதனை எதிா்கொண்டு சமாளிப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தாா், பழனிவேல் தியாகராஜன்.