சசிகலாவுடன் ஓ.பி.எஸ் ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சந்திப்பு.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவரப்பட்டுவில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கத்தை சந்தித்து சசிகலா பேசியுள்ளார். திருமண விழாவில் நடந்த சந்திப்பில் ஒரத்தநாடு எம்எல்ஏவான வைத்திலிங்கத்துக்கு சாக்லேட்டையும் வழங்கினார் சசிகலா. அதிமுகவில் உட்சட்சி பிரச்சனை நிலவி வரும் நிலையில், சசிகலா ஒற்றுமை குரல் எழுப்பி வரக்கூடிய சூழலில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. தொண்டர்களை சந்திப்பதற்கும், கோயில் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வில் பங்கேற்பதற்கும் சசிகலா தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பாகவே சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றார். அப்போது, திருமண விழாவில் சசிகலாவை, சட்டமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ்-யின் தீவிர ஆதரவாளருமான வைத்திலிங்கம் சந்தித்து பேசியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இன்று வைத்திலிங்கத்தின் பிறந்தநாள் என்று தெரிவித்ததை அடுத்து சசிகலா அவருக்கு வாழ்த்து தெரிவித்து சாக்லேட் வழங்கினார். ஒற்றை தலைமை என்று அதிமுகவில் பிரச்சனை தொடர்ச்சியாக இருந்து வரும் நிலையில், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் சசிகலா கூறி வரும் நிலையிலும், அதேபோல் ஓபிஎஸ்-யும் வலியுறுத்தி வரும் சூழலில் இருவரின் திடீர் சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ரகசியமாக பல்வேறு தரப்புகளில் சந்திப்பு நடந்து வந்தாலும், வெளிப்படையாக இந்த இருவரின் சந்திப்பு நடைபெற்றிருப்பது அதிமுகவில் ஒரு முக்கிய நகர்வாகவே பார்க்கப்படுகிறது.