சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ், டிடிவி, அன்புமணி பங்கேற்பு

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் பிரதமர் நரேந்திர மோடி, முதல் முறையாக தமிழகத்தில் நேற்று பரப்புரை மேற்கொண்டார். இதையடுத்து, சேலத்தில் இன்று நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள், பிரதமர் மோடியுடன் பங்கேற்க உள்ளனர். கோவையில் நடைபெற்ற வாகன பேரணியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக நிகழ்வுகள் என கோவை மாநகரமே களைகட்டியது. தொடர்ந்து சாய்பாபா காலனி பகுதிக்கு வந்த பிரதமர் மோடி, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களை கண்டு உற்சாகத்துடன் கையசைத்தார். அப்போது பாஜக தொண்டர்கள் வேண்டும் மோடி மீண்டும் மோடி எனக் குரல் எழுப்பினர். பின்னர் பிரதமர் மோடிக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. 100 நாதஸ்வர கலைஞர்கள் மங்கள வாத்தியம் இசைத்து வரவேற்பு அளித்தனர். மோடியின் திறந்தவெளி வாகனத்தில் எல்.முருகன், வானதி சீனிவாசன், அண்ணாமலை ஆகியோர் பிரதமருடன் பயணித்தனர். சாய்பாபா காலனியை தொடர்ந்து சிந்தாமணி சாலை பகுதிக்கு வந்த பிரதமர் மோடிக்கு பாஜகவினர் பூக்கள் தூவி வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கு நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி உற்சாகத்துடன் கண்டுகளித்தார். வாகனப் பேரணியின் இறுதியாக ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் அருகே வந்த பிரதமர் மோடி, 1998- ஆம் ஆண்டு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது நடந்த நிகழ்வுகளை பிரதமர் மோடியிடம் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் எடுத்துரைத்தார். பின்னர் பிரதமர் மோடி, இரவு தங்குவதற்காக சர்க்யூட் ஹவுஸ் புறப்பட்டுச் சென்றார். செவ்வாய்கிழமை காலை கேரள மாநிலம் பாலகாடு புறப்பட்டுச் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மதியம் மீண்டும் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கக் கூடிய கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், தனது கோவை பேரணி குறித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போவதாக கூறியுள்ளார். பாஜக தமிழ்நாடு முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது என்றும், திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.