அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு..!

டெல்லி: அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் தந்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ பன்னீர் செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார்.

ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் என அதிமுக இரண்டு குழுக்களாக பிரிந்துள்ளது.இந்தநிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நேரத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களோடு வந்து சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைலைமை அலுவலகத்தை கைப்பற்றினார். அப்போது ஓபிஎஸ் – இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 45க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். மேலும் ஏராளமான வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் கலவரத்தை தணிக்கவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் வருவாய்த்துறை அதிகாரிகள் 145வது சட்டப்பிரிவை பயன்படுத்தி அதிமுக அலுவலகத்தை ‘சீல்’ வைத்து பூட்டினர்.மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன்ராம் கட்டுப்பாட்டில் கட்சி அலுவலகம் கொண்டு வரப்பட்டது. கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்ற வேண்டும் என்று, ஓபிஎஸ் – இபிஎஸ் ஆகியோர் சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி சதீஸ்குமார் தீர்ப்பு வழங்கினார்.இதைத் தொடர்ந்து 10 நாட்களாக மூடப்பட்டு கிடந்த கட்சி தலைமை அலுவலகம் திறக்கப்பட்டு, எடப்பாடி அணியினரிடம் சாவி ஒப்படைக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இந்த நிலையில், அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் தந்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ பன்னீர் செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.