டெல்லி: இந்திய நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 18ம் தேதி தொடங்க உள்ள நிலையில், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஆங்கில வார்த்தைகளும், இந்தி வார்த்தைகளும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.
வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுக்கேட்பு, கொரோனா பரப்புவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், அழிவு சக்தி, காலிஸ்தானி, முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட், இரட்டை வேடம், பயனற்றது, ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம்,போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல ஆகிய வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாது.இவற்றை பயன்படுத்தினால் சபை தலைவர்கள், சபை குறிப்பில் இருந்து நீக்கிவிடுவார்கள்.
இதனிடையே நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என குறிப்பிட்ட வார்த்தைகளை பேச தடை விதித்ததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது. அரசை விமர்சிக்க எதிர்கட்சிகள் கூறும் அனைத்து வார்த்தைகளும் பயன்படுத்த கூடாதவை என ஒன்றிய அரசு கூறுகிறது என்று சாடிய முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், அடுத்து எதை தடை செய்யப்போகிறீர்கள் என ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
அதே போல், நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட வார்த்தைகளை பேச தடை விதித்ததற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என கூறிய வார்த்தைகளை நான் பயன்படுத்துவேன் என எம்.பி. டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார். தடை விதித்த வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் பேசுவேன்; சபாநாயகர் என்னை சஸ்பெண்ட் செய்யட்டும் எனவும் டெரிக் ஓ பிரையன் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளின் புதிய பட்டியல் சங்கி என்ற வார்த்தை மட்டும் தான் இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். பாஜக எவ்வாறு இந்தியாவை அழித்து வருகிறது என்பது குறித்து பேசும் போது, எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் அனைத்து வார்த்தைகளையும் அரசு தடை செய்துள்ளது எனவும் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.