எதிர்க்கட்சிகள் தொடர் அமளி.. 2-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்..!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியும் மாறிமாறி அமளியில் ஈடுபட்டதால் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் இரு அவைகளும் முடங்கின.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கிய நிலையில், அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சிகளும், பிரிட்டனியில் இந்திய நாடாளுமன்றம் குறித்து பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென்று ஆளுங்கட்சியும் மோதிக் கொண்டதால் நேற்று நாள் முழுவதும் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், இன்றும் அதானி, ராகுல் விவகாரங்களை இரு அவைகளிலும் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் எழுப்பியதால் காலை முதலே கூச்சலும் குழப்பமும் நீடித்தது.

காலை 11 மணிக்கு அவை தொடங்கியவுடன் மக்களவையும், 12 மணிக்கு மாநிலங்களவையும் எம்.பி.க்களின் அமளியால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, உணவு இடைவெளிக்கு பிறகு அவைகள் கூடியவுடன் மீண்டும் அமளி தொடர்ந்ததால் நாளை காலை 11 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.