பழநியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவத் திருக்கோயில்களில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி தினமான இன்று அதிகாலை பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கும் வைபவம் நடைபெற்றது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலான ஶ்ரீ இலக்குமி நாராயண பெருமாள் கோயிலில் அதிகாலை அருள்மிகு இலக்குமி சமேதர் நாராயணருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நான்கு மணி அளவில் சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கருடாழ்வார் எதிர்சேவை புரிந்தார். சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பரமபதவாசல் வழியே சுவாமி எழுந்தருளிய பின் கருடாழ்வார் வாகனத்தில் நான்கு இரதவீதிகளிலும் எழுந்தருளினார். பெருமாளை தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் சொர்க்கவாசல் வழியாக சென்று அருள் பெற்றனர். இதேபோல பழனியை அடுத்துள்ள பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலிலும் பரமபத வாசல் திறக்கப்பட்டு அருள்மிகு அகோபில வரதராஜ பெருமாள் மற்றும் லட்சுமிதேவி ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சொர்க்கவாசல் ராப்பத்து என பத்து நாட்களுக்கு திறந்திருக்கும். சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சியில் இணைஆணையர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.